முக்கிய அறிவிப்பு :- இந்த பதிவினை தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. மேலும் ஓட்டுபட்டையும் நீக்கியுள்ளேன்.

தமிழ்மண நிர்வாகி சமீபத்தில் எம் சக சகோதர பதிவர்களை இழிவாக பேசியதற்காக என் வேதனைகளை பதிவு செய்கிறேன். அதனை தொடர்ந்து வந்த அவரின் பின்னூட்டத்தில்  இஸ்லாமிய முகமனை இழிவாக கேலி செய்ததற்காக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட மெயிலுக்கு மற்றைய தமிழ்மண நிர்வாகிகள் விளக்கம் அளிக்காத வரை இந்த பதிவினை இணைக்க போவதில்லை.
************************************
 உறவினர் ஒருவரை வங்கியில் சந்திக்க நேர்ந்தது. நகைக்கடன் வாங்கும்/மீட்கும் பிரிவில் நின்றுக்கொண்டிருந்தார்.  சில தினங்களுக்கு முன்பு தான் தன் சம்மந்தி ( தன் பெண்ணின் மாமியார்) இறந்ததாக தகவல் சொல்லி சென்ற நினைவு. நல விஷாரிப்புக்கு பின்னும் நாகரிகம் கருதி அந்த மாமியிடம் என்ன காரணம் என்றும் கேட்கவில்லை. அம்மாவிடம் விசாரித்த போது தான் சொன்னாங்க "கத்தம் பாத்திஹா(??!!) ஓதுவாங்கல? (காரியம்/தவசம்) யார்வீட்ல ஆள் இறந்து போனாங்களோ அந்த வீட்ல சம்மந்தம் பண்ண பொண்ணுவீட்டுக்காரங்க தான் கத்தத்துக்கு வரவங்களுக்கு சாப்பாடு போடணும்". பதில் பேச முடியவில்லை.

வரதட்சணை, சீர்ன்னு எல்லா பணபறிப்பு பத்தியும் தெரியும். ஆனா இந்த காரணம் ரொம்பவே புதுசு......... ஒருவேள சில ஏரியால மட்டும் தான் இந்த முறை இருக்கா அல்லது எனக்கு தான் தெரியலையான்னு தெரியல. ஆனா  எந்த வகையிலலாம் பணம் பறிக்கணுமோ அதுக்காக புதுசுபுதுசா  காரணத்த தேடி கண்டுபிடிக்கவே ரூம் போட்டு யோசிப்பாங்கன்னு மட்டும் தெரியுது. 
________________
தோழி ஹேமாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் அவள் வீட்டு தரப்பிலிருந்து 7 வகை சாப்பாடு செய்து, தாம்பூல தட்டில் பழங்கள், தேங்காய், வெத்தல பாக்கு மற்றும் சில ஆயிரங்களை வைத்து கொடுத்த போது வாங்கிக்கொண்டே மாப்பிள்ளை வீட்டார்,  “என் மகளுக்கு ஐய்யாயிரமும் 9 வக சாப்பாடும்ல போட்டேன்?” என சொன்னார். மனதில் கோபம் இருந்தும் வெளிபடுத்தாமல் “ஏதோ எங்கனால முடிஞ்சதுமா” என அடுத்த வேலையில் மும்முரமானார்கள் பெண்வீட்டார். என் தோழியின் கண்ணில் கண்ணீர்.......

குழந்தைக்காகவும், கர்ப்பவதியின் மன மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்படும் நிகழ்ச்சியில் அப்பெண்ணுக்கு மன உளைச்சல் தான் மிச்சம். 5ம் மாதத்தில் குங்குமப்பூ கொடுக்கும் நிகழ்ச்சி வேறு நடந்ததாம். அந்த குங்குமபூவையும் பெண்வீட்டார்  தான் கொடுக்கணுமாம். (விட்டா குழந்தைக்கு மொட்ட போடணும்.அதுக்கு சலூன் கடக்காரனுக்கு மாச மாசம் 25 ரூபா கொடுத்துடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க)
____________
வீரசோழன் என்னும் ஊரில் சில காலம் வசித்த போது அவ்வபோது மாலை வேளைகளில் தாம்பூல தட்டுக்கள் ஏந்தி பெண்கள் கூட்டம் போவது கண்டதுண்டு. காரணம்  “உன் மகள் கர்ப்பவதி ஆகிவிட்டாள்” என மாப்பிள்ளை வீட்டார் சொன்ன அன்றே பெண் வீட்டார் ஒற்றைபடை எண்ணிக்கையில் பழ வகைகளும், தேங்காய், ஹார்லிக்ஸ், பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் துணிமணி சகிதம் சீர் கொண்டு போக வேண்டுமாம். (பாவம் இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரால் வாங்க முடியாது பாருங்க)

____________

தன் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆணுக்கு அன்பின் வெளிப்பாடாய் சிறு பொருள் ஒன்றை எவனோ ஒருவன் கொடுத்து வேரொன்றை நட்டுவிட்டு  போக ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவாறு பரிமாணம் புகுத்தப்பட்டு இன்று வரதட்சணை,சீர், சீமந்த சாப்பாடு,பிரசவ செலவு, தாய்மாமன் சீர், தலதீபாவளி/ரம்ஜான்க்கு புத்தாடை என பல விழுதுகளை தாங்கிய அசைக்க முடியாத ஆலமரமாகி ஊரையே  நாசம் செய்துவிட்டது......

 ஆசைபட்டதெல்லாம் கேட்ட நொடியிலேயே வாங்கி தர  சக்தியுடையவர்கள் கூட மகனை திருமணம் செய்து கொடுக்கும் போது மட்டும் ( சாகும் வரை) திருஓட்டை ஏந்திய பிச்சைக்காரர்களாக மாறும் பெற்றோர்கள்........ஐய்யோ பரிதாபம் (இறைவா இந்த பிச்சைஎடுக்கும் இழிநிலையை ஒருபோதும் எங்களுக்கோ இனிவரும் எங்கள் சந்ததியினருக்கோ கொடுக்காமல் பாதுகாத்திடு)

ஆசையாய்,அன்பாய் வளர்த்து, படிக்க வைத்து பராமரித்த மகனை(மாட்டை) 25 வயதுக்கு மேல் திருமண சந்தையில் அதிகமாய் பணம் கொடுப்பவர்களுக்கு விற்கும் வியாபாரிகள்............ ஐய்யோ கேவலம்

தன் ரத்தத்தில் உருவான முதல் உயிரை வயிற்றில் சுமந்தும் அதை பராமரிக்க அருகதை இல்லாமல் மாமனார் வீட்டுக்கு அனுப்பும் கணவன்மார்கள்......... ஐய்யோ வெட்ககேடு


பிச்சைக்காரர்களின் நியாயமான (??!!) காரணங்கள்
அதானே மொற!! (எவுக தான் இத கண்டுபிடிச்சாக? கைல கெடச்சா...........!!!)

பணம் கொட்டி படிக்க வச்சுருக்கோம்ல? சும்மாவா??!! ( அடடே...... அப்ப பொண்ண பெத்ததும் வீட்டுவேலைக்கு அனுப்பி வச்சுடுவாகளோ?)

அவுக வீட்டு பொண்ணுக்கு தானே இனி சம்பாதிச்சு கொடுக்க போறான் ( ஐய்யோடா...... வரதட்சணைய நாங்க வச்சு காலத்த தள்ளிக்கிறோம். இனி மகன் சம்பாதிக்கிறதெல்லாம் மருமகளுக்கு தான்னு எழுதி கொடுக்க தயாரா? அல்லது மருமக சம்பளத்த அவ அம்மா வீட்டுக்கே கொடுக்கலாம்னு சொல்ல தைரியம் இருக்கா?)

அதெல்லாம் வாங்கலன்னா பையனுக்கு கொற இருக்குன்னு நாலு பேரு நாலுவிதமா  சொல்லுபுடுவாகளே ( பார்ர்ர்ர்டா.......அதிகமா ஒரு பொண்ணுக்கு பணத்த கொடுத்து தள்ளிவிட்டா அப்ப அந்த பொண்ண பத்தி அதே நாலு பேரு நாப்பதாயிரம் விதமா நார் போல் கிழிக்க மாட்டாகளா?)


நிறையா கொண்டு வந்தா அந்த பொண்ணுக்குதேனே பெரும..... ( என்ன ஒரு நல்லெண்ணம். உங்க மானத்த அடகு வச்சுட்டு மருமகளுக்கு பெரும சேக்குறீகளாக்கும்?)

கடைசி வரைக்கும் அந்த புள்ளைய நாங்க தானே வச்சு வரவு செலவு பாக்க போறோம். அப்ப கொஞ்சமாவது செய்யலைன்னா எப்படி? (நோ கமெண்ட்ஸ்.... வாமிட் வந்துடும்)

இப்படியாக
பெண்ணுக்கு நிச்சய தார்த்தம் அன்று வரும் பட்டாளம் படைகளுக்கு சாப்பாடு

திருமணத்திற்கு வரதட்சணை

குடிக்குறதுக்கு டம்ளர்ல இருந்து பெட்சீட் வரைக்கும் சீர்வரிசைகள்

மண்டப செலவு, ரிசப்ஷன் செலவு, கல்யாண விருந்து செலவு

மறுவீட்டுக்கு அழைக்க போகும் போது சீர்

கர்ப்பம் ஆனா சீர்

குங்குமபூ கொடுக்கும் நிகழ்ச்சி

வளைகாப்பில் 5,7,9,13...... வகை சாப்பாடு, பணம்

தலை தீபாவளி/ரம்ஜான்/பொங்கல்................க்கு துணிமணியுடன் பணம்

பிரசவ செலவு

பிறந்த குழந்தைக்கு செயின், மோதிரம், கொழுசு,.....................

இது வரைக்கும் பெத்தவங்க பாடு. அடுத்தது வைக்கப்படும் ஆப்பு தாய்மானனுக்கு........

மொட்டை போட, காதுகுத்த இதெல்லாம் தாய்மாமன் கால்ல உக்காந்து செஞ்சா  மட்டும் தான் முடி இறங்கும்/ காதுல ஓட்டை விழும் போல

பருவம் எய்தியதும் நடத்தும் விழா (?!!)

அப்பறம் பழையபடி திருமண படலம்.... அதுலையும் தாய்மாமா சீர்,துணி நகை



(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... சோடா ப்ளீஸ்....... )இன்னும் எதையாவது விட்டு வச்சுர்க்காங்களா? இல்ல நான் தான் தெரியாததுனால விட்டுட்டேனா???

இனைக்கு காலத்துல அரசன் இருந்தா பன்மையன்றி ஒரு பெண் பிள்ளை பெற்றால் போதும் நடுரோட்டுக்கு வந்துடலாம் (ஆரம்பிச்சு விட்டதே இவங்களா தான் இருப்பாங்களோன்னு டவுட்டு)

மாப்பிள்ளை வீட்டாருக்கு
தயவு செய்து அவரவரின் நிலையிலிருந்து யோசித்து பாருங்கள். வரதட்சணை கொடுக்க இயலாமல் எத்தனை பெண்களின் கனவுகள் கண்ணீரில் மூழ்கிகிடக்கிறது? எத்தனை எத்தனை கனவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது? எத்தனை பேரின் இளமை புதைகுழிக்குள் திணிக்கப்பட்டுள்ளது? இன்றில்லை என்ற போதும் என்றாவது உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். உயிரை எவ்வாறு மீட்பீர்கள்? இளமையை எவ்வாறு திருப்பி தருவீர்கள்? வாழாவெட்டிகளின் கண்ணீருக்கு என்ன பதிலை தர போகிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் இதற்கு பிறகு பெண் வாரிசு வராமல் போய்விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். திருமண செலவில் பாதியை கூட சுமக்க வேண்டாம். உபரி வருமானங்களையாவது விட்டுக்கொடுக்கலாமே..... :-( பிச்சை எடுப்பதை விடவா ஒரு இழிநிலை இருக்க முடியும்? இறுதியில் இறைவனிடத்தில் இக்குற்றத்திற்காக என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?

யோசிங்க


மனமாற்றம் நிகழும் போது மட்டுமே ஒவ்வோர் விழுதுகளும் வெட்டப்பட்டு மரம் கூட இருந்த இடமும் சுவடும் தெரியாமல் போகும்.
வெட்டப்படும் என்ற நம்பிக்கையில்........

உங்கள் சகோதரி
ஆமினா


தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை- அல்குர்ஆன்

, , ,

63 comments:

  1. தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக சகோ.ஆமினா,

    அப்பப்பா... ஆரம்பம் முதல் இறுதி வரை அனல் பறக்கும் காட்டமான வார்த்தைகளுடன் கூடிய சிறப்பான பதிவு. முத்தாய்ப்பான முடிவு அருமை..! பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  2. Tamilmanam matter very correct. . .

    ReplyDelete
  3. ஆவேசத்தைத் தூண்டுது ஆமினா....

    நான் நினைக்கிறேன் எங்கள் பகுதியில்...இந்தப் பணச்சூரையாடல் முறை ( நீங்கள் குறிப்பிட்ட பட்டியல் ) குறைவென்றே நினைக்கிறேன்....
    இங்கு ஒட்டு மொத்த சுரண்டலையும்...
    வட்டியும் முதலுமாக சீதனத்தில் கரக்கிறார்கள்.....

    பெண்கள் தனது மகர் தொகையை உயர்த்திவிட்டால்தான் அடங்குவார்களோ?????

    ReplyDelete
  4. சமுதாய சீர்கேடுகளை துணிச்சலுடன் சாடியது super. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பணிகள்.

    ReplyDelete
  5. தலைப்பிலேயே சூடு போட்டு விட்டீர்கள்.
    பெணகளும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் போது இந்த நிலைமை மாறும்.

    ReplyDelete
  6. @சகோ.சிவகுமாரன்,

    //பெணகளும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் போது இந்த நிலைமை மாறும்.//

    இதில், ஒரு சின்ன திருத்தம் சகோ....

    அப்படி அவர்கள் சம்பாரிப்பது முழுக்க முழுக்க அவரின் இஷ்டப்படி தன் தந்தை தாய் சகோதர்களுக்கு தன் சொந்தங்களுக்கு செலவுக்க கொடுக்க முடியும் என்றால் ஓகே..!

    இல்லை... அதுவும் முழுதும் கணவன் குடும்பத்தாருக்கே தரப்படல் வேண்டும் என்றால்...

    இதற்குப்பெயர்தான்...

    மாதாமாதாம் வரதட்சிணை வாங்குவது..!

    one time daowry-ஐயும் விட இது மிகவும் கொடிது.

    ReplyDelete
  7. மிக நல்ல பதிவு சகோதரி ,நானும் வீரசோழன் ஊர்தான் தாங்கள் குறிப்பிடும் நடைமுறை இன்னும் விலகவில்லை .

    ReplyDelete
  8. சாட்டையடி பதிவு ஆமினா .இன்னும் ஒரு சம்ப்ரதாயம் தாலி பிரித்து கோர்ப்பது அதுவும் கூட பெண் வீட்டார் தலையில் .

    ReplyDelete
  9. மனமாற்றம் நிகழும் போது மட்டுமே ஒவ்வோர் விழுதுகளும் வெட்டப்பட்டு மரம் கூட இருந்த இடமும் சுவடும் தெரியாமல் போகும். வெட்டப்படும் என்ற நம்பிக்கையில்........
    //

    மிக அருமையாக சொன்னீர்கள் சகோ!

    ReplyDelete
  10. இதை நினைக்கும்போது காதல் கல்யாணம் எவ்வளவோ பெட்டர் என தோன்றுகிறது... பெண்கள் குடும்பத்திற்கு இது போன்ற பிரச்சனைகள் வராது பாருங்க.. இன்றைய சூழ்நிலையில் கொஞ்சமாவது மாறிருக்கு சகோ!... இதற்கு முன்னால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இதை நினைக்கும்போது தான் முன்னோர்கள் மீது கோபம்கோபமாக வருகிறது... பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  11. இங்க மட்டும் தாங்க வாங்கியவங்க கஷ்டப் படுறாங்க, மாப்பிள்ளைய வாங்கிட்டு இவங்க படுற கஷ்டம் இருக்கே.. பெண்கள் சிறப்பா ஒரு முடிவு பண்ணனும், வரதட்சனை வாங்காத ஆண்களுக்கு தான் கழுத்த நீட்டுவோம்னு... ஆனா அவங்களுக்கும் ஒரு அண்ணன் இருப்பான் பாருங்க அங்க தான் சிக்கலே இருக்கும்... தேவை உடனடி மனமாற்றம்

    ReplyDelete
  12. @ சகோ ஆஷிக்

    //தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக சகோ.ஆமினா,

    அப்பப்பா... ஆரம்பம் முதல் இறுதி வரை அனல் பறக்கும் காட்டமான வார்த்தைகளுடன் கூடிய சிறப்பான பதிவு. முத்தாய்ப்பான முடிவு அருமை..! பகிர்வுக்கு நன்றி சகோ.//

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக ஆமின்

    வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  13. @ராஜா
    /Tamilmanam matter very correct. . .//
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  14. @நிகாஷா
    //ஆவேசத்தைத் தூண்டுது ஆமினா....

    நான் நினைக்கிறேன் எங்கள் பகுதியில்...இந்தப் பணச்சூரையாடல் முறை ( நீங்கள் குறிப்பிட்ட பட்டியல் ) குறைவென்றே நினைக்கிறேன்....
    இங்கு ஒட்டு மொத்த சுரண்டலையும்...
    வட்டியும் முதலுமாக சீதனத்தில் கரக்கிறார்கள்.....

    பெண்கள் தனது மகர் தொகையை உயர்த்திவிட்டால்தான் அடங்குவார்களோ?????//

    நிகாஷா இது ஒவோர் கால கட்டத்திலும் நான் வசித்த இருப்பிடங்களில் நடைபெற்ற அநியாயங்களின் தொகுப்பு இது என்ற போதும் இந்த பட்டியல் நீளம் தான் :-(

    //பெண்கள் தனது மகர் தொகையை உயர்த்திவிட்டால்தான் அடங்குவார்களோ?????//
    :-))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிகாஷா

    ReplyDelete
  15. @அம்பலத்தார்
    //சமுதாய சீர்கேடுகளை துணிச்சலுடன் சாடியது super. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பணிகள்.///

    மிக்க நன்றி சகோ அம்பலத்தார். உங்களின் தொடர் வருகை என்னை மிகவும் உற்சாகபடுத்துது.

    ReplyDelete
  16. @சகோ சிவகுமாரன்
    //தலைப்பிலேயே சூடு போட்டு விட்டீர்கள்.
    பெணகளும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் போது இந்த நிலைமை மாறும்.//

    ஏன் கேக்குறீங்க சகோ??? படிச்ச பொண்ணு, வேலைக்கு போற பொன்ணு தான் வேணும்னு இப்ப ஒரு கும்பல் அலையுது சகோ.

    சமீபத்தில் திருமணம் நடந்த என் தோழியை சந்திக்க நேர்ந்த போது அவள் சொன்ன தகவல் அதிர்ச்சியளித்தது. வேலைக்கு போவதற்காக பஸ் டிக்கெட் கூட அவள் மாமனாரிடம் தான் வாங்க வேண்டுமாம். வேலைக்கு போன முதல் நாள் அன்றே சம்பளம் பெறுவதற்காக தனியாக ஆபிஸில் கொடுக்கப்படும் ஏடிஎம்மை வாங்கிவிட்டு தான் அனுப்பினார்களாம். தன் தம்பி தங்களைகளுக்கு படிப்பு செலவுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் அவள் படும் வேதனை சொல்லி மாளாது.

    நீங்க சொல்வது வேலைக்கு போய்ட்டா ஒரு பிடிப்பு இருக்கும். யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க என்பது தானே? எதிர்த்து பேசும் திறமை உள்ள வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் கண்டிப்பாக முடியும் தான். ஆனா வாழ்க்கையில் நிம்மதி என்பது பற்ந்தே போகும். இங்கே மாப்பிள்ளை வீட்டார் கூட மனம் மாற தேவையில்லை. மாப்பிள்ளை கொஞ்சம் எடுத்து சொன்னாலே போதும். வரதட்சணை நீங்கும். வாங்குவது இழிவென நினைக்கப்படும் போது தான் கொடுப்பதும் குறையும் :-)

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  17. @வீரை மன்னன்
    //மிக நல்ல பதிவு சகோதரி ,நானும் வீரசோழன் ஊர்தான் தாங்கள் குறிப்பிடும் நடைமுறை இன்னும் விலகவில்லை //

    அட நம்மூரா :-)
    நான் பார்த்தது கிட்டதட்ட 8 ம் வகுப்பு படிக்கும் போது. இன்னும் மாற்றம் நிகழவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமே :-)
    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  18. @மாய உலகம்
    //மனமாற்றம் நிகழும் போது மட்டுமே ஒவ்வோர் விழுதுகளும் வெட்டப்பட்டு மரம் கூட இருந்த இடமும் சுவடும் தெரியாமல் போகும். வெட்டப்படும் என்ற நம்பிக்கையில்........
    //

    மிக அருமையாக சொன்னீர்கள் சகோ!//

    மிக்க நன்றி சகோ ராஜேஷ்

    ReplyDelete
  19. @மாய உலகம்
    //இதை நினைக்கும்போது காதல் கல்யாணம் எவ்வளவோ பெட்டர் என தோன்றுகிறது... //

    ஹா...ஹா....ஹா.... சரியான பாய்ண்ட் தான். இதுவும் ஒரு தீர்வு தான். ஆனா
    காதலும் ஆசையும் குறையும் போது மீண்டும் வரதட்சணை தன் கோர முகம் காட்டும் என்பது நேரடியாவே பார்க்கிறோமே சகோ இருப்பினும் குறைவாக நடக்கும் நிகச்சிகளே....

    எல்லாருமே காதல் திருமணம்னு போயிட்டா கூட குடும்பம் அங்கத்தினர் என்ற வழக்கு சொல்லே இல்லாமல் போய்விடுமோ :-)
    //இன்றைய சூழ்நிலையில் கொஞ்சமாவது மாறிருக்கு சகோ!... //
    உண்மை தான் சகோ. இன்னைக்கு நிலைமையில் திருமணம் செய்யும் மாப்பிள்ளைகள் தான் வரதட்சணை வேணாம்னு சொல்றாங்க. அதனாலேயே கொஞ்சம் கொறஞ்சுட்டு வருது. கூடிய விரைவில் எல்லோர்க்கும் இந்த மாற்றம் பரவும் என நம்புவோம் :-)

    ReplyDelete
  20. @சூர்ய ஜீவா
    //இங்க மட்டும் தாங்க வாங்கியவங்க கஷ்டப் படுறாங்க, மாப்பிள்ளைய வாங்கிட்டு இவங்க படுற கஷ்டம் இருக்கே..//
    நல்லா சொன்னீங்க சகோ....

    மொத்தமா விலை கொடுத்து வாங்கியதும் இல்லாம காலம் முழுவதும் தவணை தொகை கொடுக்கும் கேவலம் இங்கே மட்டும் தான் நடக்குது

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  21. ஸலாம் சகோ...
    திபாவளிக்கு இன்னும் நாள் இருக்குன்னு நெனச்சேன்..வந்துடுச்ச??சர வெடியா இருக்கு...
    நியாயமான பலவிஷயங்கள்..இன்னும் எனக்கு தெரியாத விஷயங்களையும் குறிப்பிட்டு இருக்கும் உங்களது கோவம் தார்மீகமானது...

    வரதட்சணைன்னு சரியாத்த பேர் வசுருக்காணுவ...கேட்டா ஒரைக்கிரமாதிரி,...பெண் மருமகளாய் வருவதற்கு தட்சனைன்னு...அதாவது பிச்சைன்னு...ஆனா ஒரைக்கலையே..

    இதில் கேட்டுபெரும் மாமியார்களுக்கும்,மாப்பிள்ளை வீட்டாருக்கும் மத்தியில்,பணம் படைத்த பெண்வீட்டாரும் இருக்கிறார்களே சகோ...ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 50 முதல் 60 சதவிகிதத்தினர் ஏழைகளாக இருந்தால் மீதம் இருப்பவர்கள் நடுத்தர,மேல்தட்டு ரக பெண்வீடாராகத்தான் இருக்கிறார்கள்...இவர்களில் அனைவரும் இல்லாவிட்டாலும் பெரும்பாலோர்
    தங்களின் படோபத்தை காட்ட,பணத்திமிரை காட்ட, ஊர் மெச்ச,என அள்ளி வீசுபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்....சிலர் வேணாம்ன்னு சொன்னாலும் எம்பொண்ணுக்கு தானே செய்றேன்னு தேவையில்லாத குப்பைகளை குவிப்பவர்களை காணமுடிகிறதே...இது இல்லவே இல்லைன்னு மறுக்கவும் முடியாதே...இவங்க தலைலையும் ஒரு குட்டு வச்சுருக்கலாம்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. மேலே தாங்கள் சொன்ன அனைத்திலும் மாற்றுக்கருத்து இல்லை...இது எனது மாற்றுப்பார்வையா? இல்லை என்னது சுற்றுச்சூழலின் வெளிப்பாடான்னு தெரியல...நான் இதை வரதட்சணையின் இன்னொரு பரிமாணமாக பார்க்கிறேன்..எனது கருத்தில் சிலர் வேறுபடலாம்..

    இன்று இந்த வரதட்சணை பொதுவாக இல்லாவிட்டாலும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தில் குறைந்து விட்டது...மணமகன்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு எனும் சரியான கொள்ளியை அனைத்திருக்கிறோம்..இன்னும் அதன் புகைச்சல் தான் நீடிக்கிறது.. இன்ஷா அல்லாஹ் அதும் அடங்கும்..இஸ்லாம் வலியுறுத்தும் அழகிய நெறியை வாழ்வில் இருசாராரும் கொண்டு, திருமணங்களை முன்னெடுக்கும் போது...அது இரு மனத்தில் மட்டுமல்ல எல்லோர் மனதிலும் நறுமணத்தை கமழச்செய்யும் என்பதில் ஐயம் இல்லை...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  24. //மனமாற்றம் நிகழும் போது மட்டுமே ஒவ்வோர் விழுதுகளும் வெட்டப்பட்டு மரம் கூட இருந்த இடமும் சுவடும் தெரியாமல் போகும். //

    Correct...

    அனல் பறக்கும் காட்டமான... சிறப்பான... பதிவு.

    ReplyDelete
  25. உங்கள் விழிப்புணர்வு பதிவு அருமை. உங்கள் பதிவை படித்து கருத்து சொல்லாம் என்று எழுதினேன். ஆனால் அது பெரியதாக போனதால் அதை நான் ஒரு பதிவாகவே போட்டு விட்டேன் http://avargal-unmaigal.blogspot.com/2011/10/blog-post_16.html .

    ReplyDelete
  26. எங்கூர்ல, பெண் பிரசவித்த பிறகு, நிறைய நாட்டுமருந்துகள் சேர்த்துச் செய்யப்பட்ட மருந்து ஆனம் & மருந்துச் சோறு ஆகியவை கிலோ கணக்கில் மணமகன் வீட்டாருக்குச் சீராகத் தரப்பட வேண்டும்!!! பிரசவித்த பெண்ணும், பெண்ணையும், குழந்தையையும் கவனித்துக் கொண்ட பெண் வீட்டார் சோர்வாக இருப்பார்கள். ஆனால் எதுவுமே செய்யாத ஆண் வீட்டாருக்கு எதுக்கு இது? கேட்டா, நாங்களா கேட்டோம்னு இதைத் தடுக்க வேண்டிய ஆண்கள் சொல்வாங்க. மறுக்க வேண்டியவங்க ஒண்ணும் (உறுதியாச்) சொல்லாதப்போ நாங்க குடுக்காம இருக்க முடியுமான்னு பெண் வீட்டார் கேட்பாங்க. :-(((((

    ReplyDelete
  27. இஸ்லாமிய முகமனை கேலி செய்தார்களா? அது குறித்த விபரத்தை அல்லது அதை எந்த வலைப்பூவில் கூறினார்கள் என்பதை எனக்கு இமெயில் அனுப்புங்கள். madrasminnal@gmail.com.

    ReplyDelete
  28. மனுஷன் கண்டுபிடிச்சதுலையே ஒரு அநியாயம் இந்த வரதட்சினைதான்,

    நான் காலரை தூக்கிவிட்டு சொல்லுவேன் என் கல்யாணத்துக்கு மனைவி வீட்டுல இருந்து நயா பைசா வாங்கலை, அதனால இப்பவும் என் மீது மனைவியும் அவர் குடும்பத்தாரும் மிகுந்த பாசமாக இருக்கிறார்கள்!!!!

    ReplyDelete
  29. சகோ சிவகுமார்

    தங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளேன்... சரி பார்க்கவும்

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....

    சாட்டையடி பதிவு.
    இனியாவது சில ஜென்மங்களுக்கு உரைக்குதான்னு பார்போம்.

    ReplyDelete
  31. Assalamu Alaikkum,, Good Post,,

    ReplyDelete
  32. வணக்கம் அக்காச்சி,
    நலமா?

    தமிழ்மணம் தொடர்பான தங்கள் முடிவு சரியே,
    வரதட்சணை கொடுமையான விடயம் அக்கா.
    உலகம் அபிவிருத்திப் பணியில் முன்னேறிக் கொண்டு போக, நாம் இப்போதும் பின் தங்கியே வாழ்கிறோம் என்பதற்கு அடையாளமாக எம் சமூகத்தில் உள்ள கரும் புள்ளி இது,

    சமூகத்திற்குச் சாட்டையடி கொடுக்கும் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  33. // அன்றே பெண் வீட்டார் ஒற்றைபடை எண்ணிக்கையில் பழ வகைகளும், தேங்காய், ஹார்லிக்ஸ், பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் துணிமணி சகிதம் சீர் கொண்டு போக வேண்டுமாம். (பாவம் இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரால் வாங்க முடியாது பாருங்க) //

    ஒத்தப் படையா.. இதோ.
    ஒரே ஒரு நாகப் பழம் / இலந்தப் பழம், எலுமிச்சம் பழம், வேப்பம் பழம், நாரத்தம் பழம் (சீசனுக்கேத்த மாதிரி)
    ஒரே ஒரு ஹார்லிக்ஸ் தூள்
    ஒரே ஒரு துணியா..... சீப்பா ஆளுக்கொரு கர்சீப்.. (அதுவும் ரொம்ப சீப்பா)


    ஒரு ஆணுக்கு.. நல்ல கல்வி / தொழில் செய்து தருவது பெற்றோர் கடமை. அதன் பின், கற்றதன் மூலம் பொருள் ஈட்டுவதே அவனுக்கு அடையாளம். அதை வைத்து தனது (1)மனைவி (2)மக்கள்,
    (3) வயதான பெற்றோருக்கும், (4) ஒருவேளை கணவனின்றி கஷ்டப் படும் சகோதரி இருந்தால் அவளையும் சேர்த்து (சகோதரர்கள் இருப்பின் 3 & 4 சம பொறுப்பு), தாங்குவது தான் அவனுக்கழகு. வேறு வகையில் பணம் பொருள் எதிர்பார்த்தால் அவன் ஆண்மகனல்லன்.

    Good article.

    ReplyDelete
  34. சந்தையில் விற்கப்படும் ஒரு ஆட்டை, மாட்டைப் போல்தான் தானும் என்று ஒரு ஆண் உணரும் அன்றுதான் இது மாறும்.

    //தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை- அல்குர்ஆன்//

    இது இன்று வரை உண்மைதான். இன்னும் உண்மையாகவே.

    ReplyDelete
  35. வரதட்சனை பற்றிய நல்ல பதிவு.

    தமிழ்மணம் சரியான முடிவு

    ReplyDelete
  36. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ
    உங்களது profile இல் உங்களைப்பற்றி அரைகுறை என நீங்கள் குறிப்பிட்டதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.சமீபத்திய பதிவுகளை படிக்கும் போது அவ்வாறு தெரிய வில்லை

    ReplyDelete
  37. நோ கமெண்ட்ஸ்.... வாமிட் வந்துடும்///// ithai vida veru commnts irukumaa theriyala..intha vaarththaikal ovvonrum muththu muththu muththu muththu muththu.. sako//எவுக தான் இத கண்டுபிடிச்சாக? கைல கெடச்சா...........!!!)//plz plzz enakkum konjam solli anupungka eththina naal ethir paarpu sema kaddu kadduvomle

    ReplyDelete
  38. வரதட்சணை கொடுமை ...கேவல நிகழ்வு...

    தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பணி ஆமினா...

    ReplyDelete
  39. உங்களது கருத்துக்கள் தரமானவை.. நீங்கள் மற்றைய ப்ளாக் களில் பின்னூட்டமிடும் விதம் அருமை. எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

    ReplyDelete
  40. @சகோ ரஜின்
    வ அலைக்கும் சலாம் வரஹ்....

    //இவர்களில் அனைவரும் இல்லாவிட்டாலும் பெரும்பாலோர்
    தங்களின் படோபத்தை காட்ட,பணத்திமிரை காட்ட, ஊர் மெச்ச,என அள்ளி வீசுபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்...//

    வரதட்சணை அழிக்க முடியாமல் பின்னி பினைந்து சிக்கலான அமைப்பாக இருப்பதற்கு இதான் சகோ காரணம். 4 பேர் மருமகளாய் இருக்கும் இடத்தில் தன் மகள் இருந்தால் மற்றவர்களின் முன் அவள் தாழ்ந்தவளாய் போய்விட கூடாது என்பது தான் பெண் வீட்டாரின் எண்ணமாக இருக்கும். அதனாலேயே தன் படோபத்தை காட்ட வேண்டியுள்ளதாக எண்ணுகிறேன்

    இரண்டாவதாக,
    ஒரு வேளை தன் மகள் இதனால் கொடுமைபடுத்தப்படுவாளோ என்ற எண்ணம். எல்லாமே உளவியல் ரீதியான வினைகள். நான் கூட நினைப்பதுண்டு “இது அம்மா எனக்கு கொடுத்தது சீதனாக” என யாராவது சொல்லும் போது என்னை குத்தி காண்பிப்பது போலவே தெரியும் அவர்கள் நல்ல எண்ணத்தில் சொன்னாலும் கூட,

    வரதட்சணையே வேண்டாமென சபையில் சொல்லி நல்லவர்களாய் தன்னை காட்டி விட்டு பின்னாளில் அனைவருக்கும் முன் குத்திகாட்டி பேசுபவர்கள் இன்னுமே சமுதாயத்தில் உண்டு. ஒரு பக்கம் நா வரதட்சணை வேணாம்னு சொல்லிட்டேன் என சொல்லி க்கொண்டு இன்னொரு பக்கம் தன் கொடூர முகத்தை காட்டுகின்றனர். பெரும்பாலும் பார்ப்பவர்களுக்கு இவர்கள் நல்லவர்களாகவே தெரிகின்றனர். ஒரு மருமகளிடம் நடந்துக்கொள்வது பாவம் பலபேருக்கு தெரியாது.

    இத்தகைய உளவியல் ரீதியால் தான் இன்னும் வரதட்சணை ஆங்காங்கே தலைதூக்கியுள்ளதாக படுகிறது. ஆக இங்கேயும் மாப்பிள்ளை வீட்டார் மேல் தான் குற்றம் சாட்ட வேண்டியுள்ளது :-) நீங்கள் சொல்வது போல் இதுவும் வரதட்சணையின் இன்னொரு பரிமாணம் தான்.

    //இஸ்லாம் வலியுறுத்தும் அழகிய நெறியை வாழ்வில் இருசாராரும் கொண்டு, திருமணங்களை முன்னெடுக்கும் போது...அது இரு மனத்தில் மட்டுமல்ல எல்லோர் மனதிலும் நறுமணத்தை கமழச்செய்யும் என்பதில் ஐயம் இல்லை...//

    நிச்சயமாக

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ரஜின்

    ReplyDelete
  41. @சே.குமார்
    ////மனமாற்றம் நிகழும் போது மட்டுமே ஒவ்வோர் விழுதுகளும் வெட்டப்பட்டு மரம் கூட இருந்த இடமும் சுவடும் தெரியாமல் போகும். //

    Correct...

    அனல் பறக்கும் காட்டமான... சிறப்பான... பதிவு.//
    மிக நன்றி சகோ

    ReplyDelete
  42. @அவர்கள் உண்மைகள்
    //உங்கள் விழிப்புணர்வு பதிவு அருமை. உங்கள் பதிவை படித்து கருத்து சொல்லாம் என்று எழுதினேன். ஆனால் அது பெரியதாக போனதால் அதை நான் ஒரு பதிவாகவே போட்டு விட்டேன் http://avargal-unmaigal.blogspot.com/2011/10/blog-post_16.html .//

    மிக்க நன்றி சகோ. உங்கள் பதிவை படித்தேன். நிச்சயமாக என் கருத்தை அங்கு பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  43. @ஹுசைனம்மா

    //எங்கூர்ல, பெண் பிரசவித்த பிறகு, நிறைய நாட்டுமருந்துகள் சேர்த்துச் செய்யப்பட்ட மருந்து ஆனம் & மருந்துச் சோறு ஆகியவை கிலோ கணக்கில் மணமகன் வீட்டாருக்குச் சீராகத் தரப்பட வேண்டும்!!! பிரசவித்த பெண்ணும், பெண்ணையும், குழந்தையையும் கவனித்துக் கொண்ட பெண் வீட்டார் சோர்வாக இருப்பார்கள். ஆனால் எதுவுமே செய்யாத ஆண் வீட்டாருக்கு எதுக்கு இது? கேட்டா, நாங்களா கேட்டோம்னு இதைத் தடுக்க வேண்டிய ஆண்கள் சொல்வாங்க. மறுக்க வேண்டியவங்க ஒண்ணும் (உறுதியாச்) சொல்லாதப்போ நாங்க குடுக்காம இருக்க முடியுமான்னு பெண் வீட்டார் கேட்பாங்க. :-(((((//

    3 மாதம் அல்லது 6 மாதம் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போகும் போது குடுப்பாங்களே அந்த சீரை தானே சொல்றீங்க
    விட்டுட்டேன் பாத்தீங்களா??
    பிள்ளை மருந்து (ஜாதிக்காய்,பெருங்காயகட்டி,வசம்பு)
    தொட்டில் கம்பு, அதில் கட்ட வேஷ்ட்டி
    நெய்மீன் கருவாடு
    லேகியம்

    என அப்போதும் ஒரு கூட்டம் போகும் சீர்வரிசை செய்ய :-(

    வேண்டாம் வேண்டாம் என்று சொல்வதெல்லாம் சும்மா என நினைக்கிறேன். அப்படியே உண்மையாய் வேண்டாம் என்றால் தொட்டு கூட பார்க்க கூடாதே.... ஆரம்பத்திலிருந்து அவர்களும் வாங்குவதால் தானே பிற்காலத்திலும் கொடுக்க வேண்டியுள்ளது. அப்படியே எங்களுக்கு இந்த சீர் வரிசை வேண்டாமென சொல்பவர்கள் நிச்சயம் செய்யும் போதே “கட்டாயமாக வேண்டாம்” என சொல்லவேண்டியது தானே... “உங்க பொண்ணுக்கு நீங்க செய்றத செய்யுங்க. நாங்க எதுவும் கேட்கப்போறதில்ல” என சொல்வதிலேயே அவர்களின் எண்ணங்கள் அழகாய் பிரதிபலிக்கப்பட்டுவிடுகிறது.
    (குறிப்பிட்ட சிலரை மட்டும். உண்மையாகவே ஆரம்பம் முதல் வரதட்சணை எதிர்த்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்:-)

    thanks hussainammaa

    ReplyDelete
  44. @நாஞ்சில் மனோ
    //மனுஷன் கண்டுபிடிச்சதுலையே ஒரு அநியாயம் இந்த வரதட்சினைதான்,

    நான் காலரை தூக்கிவிட்டு சொல்லுவேன் என் கல்யாணத்துக்கு மனைவி வீட்டுல இருந்து நயா பைசா வாங்கலை, அதனால இப்பவும் என் மீது மனைவியும் அவர் குடும்பத்தாரும் மிகுந்த பாசமாக இருக்கிறார்கள்!!!!//

    மிக்க மகிழ்ச்சி சகோ மனோ. இப்படி ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
    இதனால் தான் என்னவர் மீதும் எங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு தனி மரியாதையும் பிரியமும் வந்தது. மேலும் அம்மா அடுத்தவர்களிடத்தில் சொல்லும் போது எனக்குமே பெருமையாக இருக்கும் எங்கள் மாமியார் குடும்பத்தை நினைத்து :-)

    ReplyDelete
  45. @சகோ ஹசன்
    //அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....

    சாட்டையடி பதிவு.
    இனியாவது சில ஜென்மங்களுக்கு உரைக்குதான்னு பார்போம்.//

    கண்டிப்பாக நிலை மாறும் சகோ

    ReplyDelete
  46. @சகோ ரியாஸ்
    //Assalamu Alaikkum,, Good Post,//
    வ அலைக்கும் சலாம் வரஹ்
    மிக்க நன்றி சகோ ரியாஸ்

    ReplyDelete
  47. @நிரூ
    //வணக்கம் அக்காச்சி,
    நலமா?

    தமிழ்மணம் தொடர்பான தங்கள் முடிவு சரியே,
    வரதட்சணை கொடுமையான விடயம் அக்கா.
    உலகம் அபிவிருத்திப் பணியில் முன்னேறிக் கொண்டு போக, நாம் இப்போதும் பின் தங்கியே வாழ்கிறோம் என்பதற்கு அடையாளமாக எம் சமூகத்தில் உள்ள கரும் புள்ளி இது,

    சமூகத்திற்குச் சாட்டையடி கொடுக்கும் பதிவினைத் தந்திருக்கிறீங்க.//

    சரியாக சொன்னீர்கள். கரும்புள்ளிகள் மறைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மிக்க நன்றி தம்பி

    ReplyDelete
  48. @மாதவன்
    //
    ஒத்தப் படையா.. இதோ.
    ஒரே ஒரு நாகப் பழம் / இலந்தப் பழம், எலுமிச்சம் பழம், வேப்பம் பழம், நாரத்தம் பழம் (சீசனுக்கேத்த மாதிரி)
    ஒரே ஒரு ஹார்லிக்ஸ் தூள்
    ஒரே ஒரு துணியா..... சீப்பா ஆளுக்கொரு கர்சீப்.. (அதுவும் ரொம்ப சீப்பா)//

    ஹா...ஹ...ஹா....

    இப்படியே எல்லாரும் கொடுக்க ஆரம்பிச்சுட்டா கண்டிப்பா வரதட்சணை வேரறுக்கப்படும் தான். ஆனா பேராசை பிடித்தவர்கள் இதை கூட வாங்க தயங்கமாட்டார்கள் :-((

    //வேறு வகையில் பணம் பொருள் எதிர்பார்த்தால் அவன் ஆண்மகனல்லன்.
    //
    சரியான நெத்தியடி வாக்கியங்கள்

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  49. @பிரபு
    //சந்தையில் விற்கப்படும் ஒரு ஆட்டை, மாட்டைப் போல்தான் தானும் என்று ஒரு ஆண் உணரும் அன்றுதான் இது மாறும்.

    //தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை- அல்குர்ஆன்//

    இது இன்று வரை உண்மைதான். இன்னும் உண்மையாகவே.//

    பணம் வாங்கினால் வாழ்நாள் முழுவதும் அந்த கலங்கத்தையும் சுமந்துக்கொண்டு தான் இருப்போம் என்பதனை மணமகன் இன்று நினைத்தாலே போது :-)

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  50. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    வரதட்சனை பற்றிய நல்ல பதிவு.

    தமிழ்மணம் சரியான முடிவு//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  51. @சகோ ரப்பானி
    //அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ
    உங்களது profile இல் உங்களைப்பற்றி அரைகுறை என நீங்கள் குறிப்பிட்டதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.சமீபத்திய பதிவுகளை படிக்கும் போது அவ்வாறு தெரிய வில்லை//
    வ அலைக்கும் சலாம் வரஹ்
    மிக்க நன்றி சகோ ரப்பானி
    எல்லாம் ஒரு தன்னடக்கம் தான் ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  52. @சல்ஹா
    //நோ கமெண்ட்ஸ்.... வாமிட் வந்துடும்///// ithai vida veru commnts irukumaa theriyala..intha vaarththaikal ovvonrum muththu muththu muththu muththu muththu.. sako//எவுக தான் இத கண்டுபிடிச்சாக? கைல கெடச்சா...........!!!)//plz plzz enakkum konjam solli anupungka eththina naal ethir paarpu sema kaddu kadduvomle//

    ஹா...ஹா...ஹா...ஹா...
    எதிர்பார்ப்பு பெருசா இருக்கே.... எப்படியும் நாலு தலையாவது உருளும் போல :-))

    ReplyDelete
  53. @ரெவெரி said...

    வரதட்சணை கொடுமை ...கேவல நிகழ்வு...

    தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பணி ஆமினா...//
    மிக்க நன்றி ரெவெரி

    ReplyDelete
  54. @jiff0777

    உங்களது கருத்துக்கள் தரமானவை.. நீங்கள் மற்றைய ப்ளாக் களில் பின்னூட்டமிடும் விதம் அருமை. எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..//

    மிக்க நன்றி சகோ. நிச்சயமாக வருகிறேன் :-)

    ReplyDelete
  55. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    --------
    @மாய உலகம்
    //இதை நினைக்கும்போது காதல் கல்யாணம் எவ்வளவோ பெட்டர் என தோன்றுகிறது... //

    ஹா...ஹா....ஹா.... சரியான பாய்ண்ட் தான். இதுவும் ஒரு தீர்வு தான்.
    ---------

    தாங்கள் சரியான பாய்ன்ட் என்றும் தீர்வு என்றும் எதனை ஒப்புக்கொள்கின்றீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளலாமா??

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  56. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    --------
    @மாய உலகம்
    //இதை நினைக்கும்போது காதல் கல்யாணம் எவ்வளவோ பெட்டர் என தோன்றுகிறது... //

    ஹா...ஹா....ஹா.... சரியான பாய்ண்ட் தான். இதுவும் ஒரு தீர்வு தான்.
    ---------

    தாங்கள் சரியான பாய்ன்ட் என்றும் தீர்வு என்றும் எதனை ஒப்புக்கொள்கின்றீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளலாமா??

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ//

    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    அனுமதிக்கப்பட்ட காதல் திருமணத்தை

    பெற்றோர்கள் சம்மதிக்கும் காதல் திருமணத்தை

    ReplyDelete
  57. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    சகோதரி ஆமினா,

    தங்கள் பதிலுக்கு நன்றி. ஒரு முஸ்லிமாக (இஸ்லாம் ஆதரிக்காத) காதல் திருமணங்களை, வரதட்சணை பிரச்சனை களைவதற்கான தீர்வாக தாங்கள் ஒப்புக்கொள்வது ஆச்சர்யமளிக்கின்றது.

    காதல் திருமணங்கள் - இவைகளில் வரதட்சணை பிரச்சனைகள் குறைகின்றனவா? நான் பார்த்தவரையில் கிடையாது. காதல் திருமணங்கள் பலவும் பெற்றோர் சம்மந்தத்துடன் தற்போது நடைபெறுகின்றன. எப்போது அங்கே பெற்றோர் சம்மதம் கிடைத்து விட்டதோ அப்போதே இந்த வரதட்சணை சீர் என்று உள்ளே வர ஆரம்பித்துவிடுகின்றது. பெற்றோர் சம்மதிக்காத வீட்டை விட்டு வெளியேறும் காதல் திருமணங்களை வேண்டுமென்றால் வரதட்சணை இல்லாமல் நடக்கும் திருமணங்கள் என்று சொல்லலாம். அப்படி நாம் ஒப்புக்கொண்டால் இங்கே வரதட்சணை தவிர்க்கப்படுவது காதல் திருமணம் என்பதால் அல்ல, வீட்டை விட்டு வெளியேறியதால் தான். அப்படியென்றால் வீட்டை விட்டு வெளியேறும் திருமணங்களை வரதட்சனையை தவிர்க்கும் தீர்வாக வைக்கலாம். ஆனால் இங்கேயும் பிரச்சனை உள்ளது. நான் பார்த்த சில வீட்டை விட்டு வெளியேறிய திருமணங்களில், மணமகளுக்கு எல்லாத்தையும் கொடுத்து விட்டு 'போய்விடு' என்று சொல்லிருக்கின்றனர்.

    ஆக நான் சொல்ல வருவது, காதல் திருமணங்கள் வரதட்சணை பிரச்னையை குறைக்க அல்லது நீக்க ஒரு தீர்வாக அமையாது. அப்படியே அதை தீர்வாக நீங்கள் நினைத்தாலும் அது நிரந்தரமானதும் அல்ல. உண்மையான விழிப்புணர்வு மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு.

    முஸ்லிம்களை பொருத்தவரை - பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறு சொல்கின்றது குர்ஆன். பாதைகளில் நீங்கள் உட்கார நேந்தால் உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்ற நபிமொழியும் இதனை பிரதிபலிக்கின்றது. ஆக இஸ்லாம் காதல் திருமணங்களை ஊக்குவிப்பதில்லை. அதனை ஆதரிப்பதும் இஸ்லாம் நமக்கு கற்றுத்தந்த பாதை இல்லை. இன்று வரதட்சனை/சீர் இல்லா இஸ்லாமிய திருமணங்கள் அதிக அளவில் பெருகி வருகின்றன. இதற்கு காரணம் காதல் திருமணங்களா???..இல்லையே.. தூய இஸ்லாத்தை சரியாக புரிந்துக்கொண்டது தானே. பல இஸ்லாமிய இயக்கங்களும் (பேஸ்புக்கிலும் பல குழுக்கள் இயங்குகின்றன) இந்த பிரச்சாரத்தை சிறப்பாக செய்து வெற்றிக்பெற்று வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ். உதாரணத்துக்கு இங்கே பார்க்கவும்.

    மணமகள் வீட்டாரும் வரதட்சணை/சீர் இல்லாமல் தான் தங்கள் பெண்ணை அனுப்புவோம் என்ற நிலை அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியை தருகின்றது (அதனையும் நான் மேலே கொடுத்துள்ள லிங்க்கில் பார்க்கலாம்).

    ஆக உண்மையான இறைவனுக்கு அஞ்சிய விழிப்புணர்வு மட்டுமே வரதட்சனை திருமணங்களை ஒழிக்கும், குறைக்கும் தீர்வாக இருக்குமே ஒழிய காதல் திருமணங்கள் அல்ல....

    தவறாக ஏதும் இருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்...

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  58. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    சகோதரி ஆமினா,

    அப்படியே, வரதட்சனையை ஒழிக்கும் தீர்வுகளில் ஒன்றாக காதல் திருமணங்கள் இருப்பதாக தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதால், வரதட்சனையை ஒழிக்க காதல் செய்யுங்கள் என்று தாங்கள் ஊக்குவிப்பீர்களா என்பதையும் அறிய ஆவல்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  59. சலாம் சகோ ஆஷிக் அஹ்மத்

    //ஒரு முஸ்லிமாக (இஸ்லாம் ஆதரிக்காத) காதல் திருமணங்களை//

    உங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்.-இறைவசனம் 4:3
    இதுக்கு உங்களின் கருத்து அறிய ஆவல்


    காதல் என்பது வெறும் பருவகவர்ச்சியோடு மட்டும் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள் என்றால் மேற்க்கொண்டு நான் பேச இயலவில்லை.

    ////இதை நினைக்கும்போது காதல் கல்யாணம் எவ்வளவோ பெட்டர் என தோன்றுகிறது... //
    இதற்கு என் பதில்
    இதுவும் ஒரு தீர்வு தான்.

    இது மட்டுமே தீர்வுன்னு நான் சொல்லலையே.... அதற்கு பின் நான் குறிப்பிட்ட //காதலும் ஆசையும் குறையும் போது மீண்டும் வரதட்சணை தன் கோர முகம் காட்டும் என்பது நேரடியாவே பார்க்கிறோமே சகோ// என்ற வரியை சகோ ஏன் குறிப்பிடவில்லை என தெரியவில்லை. ஒரு வேளை அந்த வார்த்தை மட்டும் தான் பிரச்சனையா?

    //குறைகின்றனவா? //
    குறைக்கும். ஒழிக்காது.

    //எப்போது அங்கே பெற்றோர் சம்மதம் கிடைத்து விட்டதோ அப்போதே இந்த வரதட்சணை சீர் என்று உள்ளே வர ஆரம்பித்துவிடுகின்றது.//
    இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதால் தங்களின் குடும்ப சூழ்நிலையை பற்றி ஏற்கனவே போதிய அளவு அறிவு இருக்கும். அப்படியிருக்கையில் தான் நேசிக்கும் பெண்ணின் கஷ்ட்டத்தை தன் கஷ்ட்டமாக நினைத்து பாரத்தை இறக்க அவன் நினைப்பான். இங்கே வரதட்சணை முழுவதுமாக நீக்கப்படவில்லை என்றாலும் ஓரளவுக்கு குறையும். திருமணம் எப்படி நடக்கிறதோ.... ஆனால் அதன் பின் நடக்கும் சில கொடுமைகள்,பிரச்சனைகள் குறையும்.இது நான் அனுபவத்தில் பார்த்து உணர்ந்தது. வேடிக்கை பார்த்து உணர்ந்ததல்ல.

    //
    அப்படியே, வரதட்சனையை ஒழிக்கும் தீர்வுகளில் ஒன்றாக காதல் திருமணங்கள் இருப்பதாக தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதால், வரதட்சனையை ஒழிக்க காதல் செய்யுங்கள் என்று தாங்கள் ஊக்குவிப்பீர்களா என்பதையும் அறிய ஆவல்..//

    வயது கவர்ச்சியல்லாது வரைமுறையுடன் ஒழுக்கத்துடன் கூடிய காதலை ஆதரிக்கிறேன்.-இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை.

    வரதட்சணைக்காக காதலை ஆதரிப்பீங்களான்னா அதுக்கு என் முந்தைய பின்னூட்டம் தான் பதில் ( /காதலும் ஆசையும் குறையும் போது மீண்டும் வரதட்சணை தன் கோர முகம் காட்டும் என்பது நேரடியாவே பார்க்கிறோமே சகோ///))

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  60. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    ///உங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்.-இறைவசனம் 4:3
    இதுக்கு உங்களின் கருத்து அறிய ஆவல்////

    இஸ்லாம், கணவன் மனைவி உறவை மிக அற்புதமான ஒன்றாக சொல்லுகின்றது. கணவனுக்கு மனைவி ஆடையாகவும், மனைவிக்கு கணவன் ஆடையாகவும் இருப்பதாகவும் காதல் குறித்து இஸ்லாம் மிக அழகாக கூறுகின்றது.

    அதே நேரம், இன்று நாம் பார்க்ககூடிய திருமணத்திற்கு முன்பான ஆண் பெண் காதலை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதாவது, காதலிப்பவர்கள் பேசுவது, சுற்றுவது, தனிமையில் சந்திப்பது என்று எதனையும் அனுமதிக்கவில்லை இஸ்லாம்.

    fine. இஸ்லாம் கூறும் திருமணத்தை, நான் அறிந்ததை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் முதலில் சொல்லிவிடுகின்றேன்.

    ஒருவர் ஒரு பெண்ணை விரும்பலாம். அதற்கு காரணம், அந்த பெண் குறித்து அவரிடம் சிலர் நல்ல இறையச்சம் உள்ள பெண் என்று சொல்லிருக்கலாம். அல்லது நல்ல பண்புகளை கொண்டவள் என்றும் சொல்லிருக்கலாம். அல்லது அந்த பெண் அவருடைய உறவுக்கார பெண்ணாக இருக்கலாம். கவனிக்கவும், அவர் அந்த பெண்ணிடம் பேசியதில்லை. மற்றவர்கள் சொல்வதை வைத்து ஒரு அனுமானத்தால் இவள் தன் துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்ற விருப்பம்.
    அல்லது அவரது நண்பர்கள் ஒரு குடும்பத்தை பற்றியும் அந்த குடும்பத்து பெண்ணை பற்றியும் சொல்ல அவர் விரும்பி இருக்கலாம்.

    ரைட்...இஸ்லாமிய வரையறைபடி அடுத்து அவர் செய்ய வேண்டியது, தன் பெற்றோர்களிடம் சொல்லியோ, அல்லது நேரடியாக அந்த பெண்ணின் தந்தை அல்லது உறவினர்களிடம் சொல்லியோ பெண் கேட்பது. அவர்கள் அவரை பற்றி விசாரித்து விட்டு அந்த பெண்ணிடம் இது பற்றி சொல்லி அந்த சகோதரியின் விருப்பத்தை கேட்க வேண்டும். அந்த சகோதரி விருப்பபட்டால் அடுத்த கட்டம். அந்த பெண்ணை அவர் சென்று பார்க்க வேண்டும். அந்த பெண்ணிடம் பேசும்போது மூன்றாவது ஆளை வைத்து கொண்டு பேச வேண்டும். மகர் குறித்தும் அந்த சகோதரியிடம் கேட்கலாம். அவ்வளவுதான். இது ஓகே என்றால் அடுத்து நிக்காஹ்.

    ஆக, அந்த பெண்ணை திருமணத்திற்கு முன் அவர் பார்ப்பது ஒருமுறை மட்டுமே. திருமணத்திற்கு முன் இதே நடைமுறை தான் பெண்ணிற்கும்..

    இது தான் எனக்கு உண்டான இஸ்லாமிய அறிவைக்கொண்டு அறிந்து வைத்துள்ள இஸ்லாமிய திருமணம். நீங்கள் கொடுத்த குர்ஆன் வசமும்
    வசனமும் இதேயே குறிப்பிடுகின்றது. கவனிக்க. இஸ்லாம் பார்வைகளை தாழ்த்தி கொள்ள சொல்கின்றது. நான் மேலே சொல்லியது இந்த தாழ்த்திக்கொள்ளும் வசனத்திற்கு எவ்விதத்திலும் முரண்படவில்லை என்பதை கவனிக்கவும்.

    நான் மேலே கூறியதை தான் தாங்கள் காதல் திருமணம் என்றும், //அனுமதிக்கப்பட்ட காதல் திருமணம்// என்றும் கூறினால் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.

    ஆனால் இதில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வது என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சந்திப்பில் எந்த அளவு புரிந்துக்கொள்ள முடியும் என்றும் எனக்கு தெரியவில்லை. இதே சந்திப்புதான் பெற்றோராக பார்த்துவைக்கும் திருமணத்திற்கும். ஒரு சந்திப்பால் வரதட்சணை பிரச்சனை குறையுமா என்றும் புரியவில்லை.

    நான் சொல்ல வருவது இதுதான். காதல் திருமணங்களை பொருத்தவரை, அவற்றால் எல்லாம் வரதட்சணை பிரச்சனை குறையாது/நீங்காது. இது என் அனுபவம். உங்கள் அனுபவம் வேறு மாதிரியாக இருந்தால் அது உங்கள் கருத்து. இரு வேறு கருத்துக்கள் இருக்கும் பொது அதனை வரதட்சணையை குறைக்கும் ஒரு வழியாக முன்வைக்க முடியாது.

    ஆனால் நாம் இருவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு பொதுவான கருத்து..இறையச்சத்தை ஏற்படுத்தி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த பிரச்சனை நிரந்தரமாக தீரும் வழியாகும். அப்படியாகத் தான் தீர்ந்து வருகின்றது, இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் முற்றிலுமாக ஒழியும். இதில் நம் இருவருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கின்றேன்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  61. சலாம் சகோ ஆஷிக் அஹ்மத்

    //நான் மேலே கூறியதை தான் தாங்கள் காதல் திருமணம் என்றும், //அனுமதிக்கப்பட்ட காதல் திருமணம்// என்றும் கூறினால் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு பிரச்சனை இல்லை. //

    இதே தான்.

    வரம்பு மீறாத, இஸ்லாம் அனுமதித்த காதல் என குறிப்பிட்டேன்

    ஆனாலும் என் கண்ணோட்டத்தில் வரதட்சணை ஒழிக்காத போதிலும் குறைக்கும் என்பது என் அனுபவத்திலும் கண்ட விஷயம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  62. ஸலாம்
    இன்னும் நிறைய அனாச்சாரங்கள் எங்கள் பகுதியில் இருக்குது ... அதுக்கு சும்மா பாத்து பதிவு இடலாம் ...

    வரதட்சனை விரும்பி கொடுக்கலாமா ??
    இப்படியும் இருக்கே ?

    நபிகள் நாயகம் மகளுக்கு சீதனம் கொடுத்தார்களா

    http://searchabletruth.blogspot.com/p/blog-page.html

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)