பல 'எதிர்'பார்ப்புகளோடு தொடங்கிய பதிவர் சந்திப்பு மனநிறைவுடன் நடந்துமுடிந்தது! அதில் நானும் கலந்துகொண்டேன்.... ஒருவாரம் ஆகியும் இன்னும் பதிவர் பற்றிய நினைவுகள் நீங்கவில்லை..
 |
சேமித்துவைக்கும் பொருட்களோடு பீரோவில் பத்திரமாய்.... |
சென்னை என்பதால் வருவதற்கு பெரிய சிரமம் எதுவும் இருக்கவில்லை. ரம்ஜானுக்கு சென்னை செல்லவேண்டி இருந்தது சில காரணங்களால் தடைபட்டது! ரம்ஜானுக்கு சென்னை சென்றிருந்தால் நிச்சயம் பதிவர் சந்திப்பில் கலந்திருக்க முடியாது. ஏனெனில் ஒருமாதம் முன்பே ட்ரைனில் டிக்கெட் முன்பதிவு செய்து 25 சனிகிழமை இரவு ரிட்டன் போட்டிருந்தேன்... அது கேன்சல் ஆக பதிவர் சந்திப்புக்காவது போய்விட்டு வரலாம் என மீண்டும் 25 இரவுக்கு டிக்கெட் போட்டால் வெயிட்டிங் லிஸ்ட் கிட்டதட்ட 90க்கு மேல்! போட்டும்விட்டேன்!
பின் மனிதாபிமானி தளத்தில் என் கமென்ட் பார்த்து சிவா என்னிடம் "உங்கள் சகோதரன் மேல் நம்பிக்கை இருந்தால் வருவீங்க" என சொல்ல.... சிவா சொன்னதற்காகவே வர முடிவுசெய்தேன்! :-) சாதிகா அக்காவிற்கு போன் செய்து கலந்துக்கொள்ளவிருப்பதை சொல்ல, அவர் வீட்டுக்கு நேரடியாக வர சொன்னார்...
அங்கே சென்றால் எனக்கு முன்பே லெட்சுமி மாமி இருந்தாங்க! ஒன்றாகவே மண்டபம் சென்றோம்! இதாங்க நான் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டதன் பின்னணி வரலாறு! இதுவே இவ்வளவு நீளம்னு கடுப்பாய்ட்டீங்களா... கூல்...கூல்... இனி அங்கு நடந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பார்க்கலாம்!
சாதிகா அக்கா வீட்டில் காலை சாப்பாடு முடிச்சதும் கிளம்ப தயாரானோம். சிராஜ்ஜிற்கு போன் போட்டு 9 மணிக்கு மண்டபம் வந்துடுவோம் என சொல்ல அவரோ, "பத்துமணிக்கு மேலதானே பங்க்ஷன்? ஏன் சேர் கிடைக்காதுன்னு துண்டு போட்டு எடம் பிடிக்க போறீங்களா? அதெல்லாம் நிறையாவே போட்டிருப்பாங்க! விழால முக்கியமான ஆளு... நானே இன்னும் போகல" என சொல்லி முதல் பல்பு கொடுத்தார் (அட ஆண்டவா... இவருக்கு மட்டும் கொழுப்பை நாக்குல மொத்தமா வச்சு படைச்சுட்டீயா?)
 |
ஷிவா ப்ளாக்கில் சுட்டது |
மண்டபத்திலிருந்து காரில் இறங்கிய உடனே வாசலில் வரவேற்க கசாலி அண்ணா, சங்கவி, சிவா இருந்தார்கள்! 3 பேருமே ஒன்றாய் சேர்ந்து வரவேற்க, சிவாவிடம் என்னை தெரிகிறதா எனக்கேட்டேன். அவர் தெரியாதே என ஒரே வார்த்தையில் பிரகாசமான பல்பு கொடுத்தார்! பின் நாந்தான் ஆமினா என அறிமுகம் செய்தேன். அருகில் இருந்த கசாலி அண்ணாவிடம் அதே கேள்வியை திரும்ப கேட்க அவரும் தெரியாது என்றார்! சரி இவன் தான் ஷாம்...இப்பதெரியுதா என கேட்க அப்பவும் தெரியாது என்றார்! (எல்லாரும் சொல்லி வச்சு பல்பு கொடுக்க முடிவு பண்ணீட்டீங்களா அவ்வ்வ்) நேத்துவரைக்கும் தங்கச்சி, மருமகன்னு பேசிட்டிருந்தீங்களே சாட்ல! அந்த குட்டிசுவர்க்கம் ஆமினா சத்தியமா நான் தான் என சொல்லினேன்! விட்டா அழுதுருப்பேன்!
இனி யார்கிட்டையும் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணேன் ஹி..ஹி..ஹி... அந்த நேரம் பைக்கிலிருந்து பறந்துவந்தாரு டீக்கடை ஓனரு சிராஜ்... ( நீங்கதான் விழால முக்கியமான உறுப்பினராக்கும்??!! இதான் உங்க டக்கா?) எண்ணங்களுக்குள் நான் பாரூக் அண்ணாவை அழைத்துவந்து கசாலி அண்ணா என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார். முன்பே அவருடன் பேசியிருந்தாலும் ஸ்ட்ரைட்னிங் முடி அடையாளம் காட்ட மறுத்துவிட்டது :-)
 |
ஷிவா ப்ளாக்கில் சுட்டது |
வாசலிலேயே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து பின் அரங்கத்திற்கு செல்ல கிளம்பினோம். மாடி ஏறியதும் அங்கே பெயர் பதிவு செய்துக்கொண்டிருந்தார்கள். ஐடியை ஷாம் சட்டையில் மாட்டிவிட்டேன் :-)
அப்போது பட்டிக்காட்டான் ஜெய் பெரிய வணக்கம் போட்டு நீங்க தானே ஆமினா என்றார் (அட்ரா...அட்ரா.... சந்தேகமே இல்லாம நீ பிரபலபதிவர் தான் ஆமினா! இதுக்காகவே தனியா ஒரு பதிவு போட்டு உங்கள பாராட்டுறேன் ஜெய்! ).. சூரியன் எப்.எம் ல வேல பாத்தாரு போல... மூச்சு விடாம பேசினாரு! கேமரா, விடியோ, ரூல்ஸ் என அனைத்தையும் ஒவ்வொன்றாய் விளக்க, பெண்பதிவர்களுக்காக, அவர்களின் விருப்பம், பாதுகாப்பிற்காக இவ்வளவு ஏற்பாடா என வியந்து நின்றேன்!
 |
என் சார்பில் அடையாள அட்டை போட்டுக்கொண்டான் :-) |
எங்களுக்கு முன்பே ராஜி, சசிகலா, சரளா அனைவரும் இருந்தார்கள். ஷாம் ஐடியை பார்த்ததும் தூயா "இதுவரைக்கும் நான் தான் குட்டிபதிவர்ன்னு நெனச்சேன்! என்னை விட குட்டிபதிவரா இருக்கியேன்னு கலாய்ச்சாங்க!
 |
பின்னூட்டப்புயல் சேக் தாவூத் உடன் |
சேக்தாவூது எனக்கு டீ கொண்டு வந்து கொடுக்க, அப்ப என் மகனுக்கு என சண்டை போட்டேன் ;-) (டீயா இருந்தாலும் எங்க பங்கை விட்டுகொடுக்க மாட்டோம்ல?? அவ்வ்வ்வ்வ்வ்)
 |
பார்த்த மாத்திரத்தில் அனைவர் மனதிலும் பதியகூடிய நபர் வல்லிம்மா |
வல்லி அம்மா அனைவருக்கும் பூவும் குங்குமமும் கொண்டு வந்திருந்தார். பூமேல் என்னமோ ஆசை இருப்பதில்லை... கிட்டதட்ட பூ சூடி 5 வருடங்களூக்கும் மேல் ஆகியிருக்கும்.. யாராவது கொடுத்தாலும் வேண்டாம் என சொல்லிவிடுவேன்.. ஆனால் வல்லிம்மா கொடுத்த போது வேண்டாம் என சொல்ல மனம் இல்லை.. இத்தனைக்கும் வைப்பீங்களா என தான் கேட்டார்! வைப்பேன் என்றேன்! அவர் முகத்தில் இருந்த காந்த ஈர்ப்பு அப்படி சொல்ல வைத்ததோ என்னவோ... கண்ணா என அழைத்தே அனைவரிடமும் பேசினார். விடைபெறும் போது கட்டிதழுவி நீண்டநாள் பழகிய நெருங்கிய உறவினர் போன்ற உணர்வை ஏற்படுத்தினார். ச்ச... அம்மா கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் போய்விட்டோமே என நொந்துக்கொண்டேன்!
மேடையில் ஒருவர் ஏறி தமிழ்தாய் வாழ்த்து பாட அப்போது தான் தெரிந்தது அவர் மதுமதி என்று! போட்டோக்கும் நேர்ல பாக்குறதுக்கும் சம்மந்தமே இல்ல.. ஒருவேள காதலில் தோல்வி அடைந்த சமயத்துல தாடி வளர்த்து, துன்பத்திலும் சிரி என பெரியோர்களின் வாக்குபடி சிரிச்சுட்டே எடுத்த பழைய போட்டோ போல என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்!:-)
 |
ஆஷிக் மற்றும் சேக் தாவூத் உடன் |
தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் என்னிடமிருந்து போனவன் தான் ஷாம்! அப்பப்ப நான் இருக்கேனான்னு உறுதிபடுத்த வந்தான். மீதி நேரம் அவன் மாமாமார்களுடன் சுத்திக்கொண்டிருந்தான்! (பதிவர் ஆகுறதுக்கு இப்பவே ப்ராக்டீஸ் கொடுக்குறோமாக்கும் :-)
பதிவர் அறிமுகப்படுத்த ஒவ்வொருவராய் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது என்னை அழைக்க வேண்டாம் என பாலா கணேஷ் அவர்களிடம் சொல்ல, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் உடனே மேடையில் இருந்தவர்களிடம் தெரியப்படுத்தினார். அதன் பின்னும் என் பெயரை அழைக்க, நான் மேடை ஏற வரும் போதே மதுமதி மற்றும் ஜெய் விடியோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள்! ( பொதுவான நிகழ்ச்சியில் படம் பிடிப்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால், பொறுப்பாய் இருந்து, முடிந்தளவு அவர்கள் பெண்பதிவர்களுக்காய் மெனக்கெட்டது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விஷயம்! பெண்பதிவர்கள் ராணிகளாய் நடத்தப்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனியான, சிறப்பான கவனிப்பு... இனி எப்போது பதிவர் சந்திப்பு நடத்தினாலும் கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என முடிவு செய்ய வைத்த விஷயங்களில் இதுவும் ஒன்று! )
 |
அரசியல்பதிவர் கசாலி அண்ணா உடன் :-) |
அதன் பின் சரக்கு,மப்பு என சில வார்த்தைகள் விடப்படும் போது விழாக்குழுவினர் முகத்தில் இருந்த கவலை மற்றும் மேடைக்கு சென்று சிராஜ் தொகுப்பாளரிடம் அது போல் பேச வேண்டாம் என தீர்மானத்தை உடனுக்குடன் சொன்னதுலாம் HATS OFF BROTHERS!
 |
'தல' சுய அறிமுகத்தின் போது |
பெண்களை போட்டோ எடுக்க வேண்டாம் என சொல்லியிருந்தாங்க! எந்தளவுக்கு இதை செயல்படுத்த போறாங்க என யோசித்ததுண்டு! ஆனால் அதுக்காகவே சிவா நிறையா Chair இருந்தும் எங்கும் உக்காரல போல அவ்வ்வ்! Sir விழா நடக்குற நேரம் முழுக்க நின்னுட்டே தான் கண்காணிச்சுட்டிருந்தார்! யாராவது போட்டோ எடுத்தா ஒடனே ஓடி வந்து தடுத்துட்டிருந்தார்...
நேற்று மதுமதியின் ஒரு பதிவை படித்தபோது தான் புரிந்தது! அத்தனை வேலைகளுக்கும் டென்ஷன்களுக்கும் மத்தியிலும் மதுமதி அனைவரிடத்திலும் புன்னகை பூக்க பேசியது ரொம்பவே ஆச்சர்யப்பட வைக்கிறது! சாப்பிட போகும் ஒவ்வொருவரிடமும் நலம் விஷாரித்து பேசிக்கொண்டிருந்தார். சாப்பிட்டதும் விழாவை பார்த்துவிட்டுதானே செல்வீர்கள் என சொன்னபோதும், கட்டாயமாக இருப்போம் என சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் அவரின் பொறுப்பான வழிநடத்தலை காமித்தது! (நீங்களாம் கல்யாணத்துக்கே பந்தி வைக்கிற டைம்ல போற ஆளுன்னு அவருக்கு தெரிஞ்சுக்கு போல! அதான் கேட்டிருக்கார்....)
 |
ஐஸ் சாப்பிட்டுவிட்டு வந்த போது :-)(வீடுதிரும்பல் ப்ளாக்கில் சுட்டது) |
ராஜியின் மகனுடன் ஷாம் ரொம்ப நல்லா ஒட்டிக்கிட்டான். ராஜி கடைக்கு அழைத்து சென்று ஐஸ்க்ரீம் வாங்கி கொடுக்க ஷாம் "எங்கம்மாகிட்ட பெர்மிஷன் கேட்கணும்" என்றானாம். சரி கைல வச்சுக்கோ என ராஜி சொல்ல, ராஜி கையில் இருந்த ஐஸ்க்ரீம்மை பறித்து சாப்பிட்டானாம்... (நாங்களாம் இப்பவே இப்படின்னா பாத்துக்கோங்க! ) ராஜி சும்மா பம்பரம் மாதிரி சுத்திட்டே இருந்தாங்க... பலர் கூச்சம் துறந்து சகஜமாய் பேசிபழகியதற்கு இவரின் அணுகுமுறை முக்கியக்காரணம்னு சொல்லலாம். பலரிடம் தானாகவே சென்று பேசி அறிமுகம் செய்து நீண்டநாள் பழகியவர் போல் நடந்துக்கொண்டார்.
 |
மனிதாபிமானி(ஹி..ஹி..ஹி...) சுய அறிமுகத்தின் போது! |
பதிவர் அறிமுகம் முடிந்து, சாப்பிட கூப்டும் போக மனமில்லாமல் பேசிக்கொண்டே இருந்தோம். கசாலி அண்ணா மொபைலில் இருந்த என் மருமகன் Rizal Ahamed விடியோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் அண்ணாவை சாப்பிட கூப்டு நான் அடம்பிடிச்ச போது நான்வெஜ் தான் சாப்பிடணும்னு அடம்பிடிச்சார் :-)
சிபியிடம் சாதிகா அக்கா பதிவுலக 'மொய்க்கு மொய்' பற்றி பேசும் போது "சிபி கூட என் ப்ளாக் வரதில்லைன்னு அவரை மடக்கினேன்" ( எங்கே போனாலும் ப்ளாக்கிற்கு ஆள் திரட்டுறதுல குறியா இருப்போம்ல அவ்வ்வ்)
 |
சிராஜ் கையில் தூக்குவாளி... (நோ உள்குத்து:-) |
வீட்டில் பங்க்ஷன் என்றால் உறவினர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கடைசி பந்தியில் தான் சாப்பிடுவோம். எங்களுக்கு பரிமாறுவதும் எதாவது ஒரு நெருங்கிய உறவினராகவே தான் இருப்பார். இந்த சந்திப்பிலும் அப்படியே... சிராஜ் மற்றும் கசாலி அண்ணா சாப்பாடு பரிமாறுனாங்க! ஷாம்க்கு தனியாக இலை போட்டு சாப்பிடு வைக்கப்பட்டது! ஒடனே அங்கே வந்த சிவா, "இன்னைக்கு நீ யார் முகத்தில் முழிச்ச ஷாம்? இந்த நாள் உனக்கு அதிஷ்ட்ட நாள் டா. உங்கம்மா சமையல்ல இருந்து தப்பிச்சுட்ட என இன்னொரு பல்பு கொடுத்தார்! அருகில் இருந்த கசாலி அண்ணாவிடம் "போஸ்ட்டர்க்கு பசை வேணும்னா ஆமினாவின் சாம்பார் சாதம் சரியா இருக்கும்" என பல்பு மேல் பல்பு கொடுத்தார்! அவ்வ்வ்வ்வ்வ்
 |
ஷாம் இலையில் எதுவும் இல்லாதாதுக்குகாரணம் அருகில் அமர்ந்திருக்கும் மாமாமார்கள் :-) |
பின் ஷாம் சாப்பிட மறுக்க, சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது என்று அவன் இலையில் உள்ளதெல்லாம் அவன் மாமாமார்ங்க ஆஷிக்,சேக்தாவூத் சாப்பிட்டாங்க :-) சாப்பாடு செம டேஸ்ட். ஆயிரத்தில் ஒருவன் சகோ.மணியிடம் நேரடியாகவே ஆஷிக் மற்றும் சேக் பாராட்டுனாங்க! சாப்பிட்டு முடிஞ்சதும் சிவா,சிராஜ் க்ரூப் சாப்பிட ஆஷிக் மற்றும் சேக் பரிமாற போயிட்டாங்க! அகில உலக புகழ் பெற்ற இலையை தலைகீழா மடிச்ச சர்ச்சை இங்கே தான் நடந்துச்சு ஹி...ஹி..ஹி...
ருக்மணி அம்மா, ரஞ்சினி அம்மா, சீனா ஐயா, தமிழ்வாசி ப்ரகாஷ், எல்.கே உடன் பேசிவிட்டு அரங்கத்திற்கு சென்றால் யாரோ ஒருவர் மேடையில் அமர்ந்திருந்தார்!
காலை முதல் ஒவ்வொரு பிரபலபதிவரையும் கூட இவர் யார் இவர் யார் என நான் கேட்க, இவர் தான் கேபிள் சங்கர், இவர் தான் சுரேகா, இவர் தான் ஜாக்கி என சொல்லி சொல்லி சோர்வடைந்த சாதிகா அக்காவிடம் மேடைல இருக்காரே இவர் யாருக்கா என கேட்டது தான் உச்சகட்டம்! அடக்கொடுமையே.. இவர்தான் பட்டுகோட்டை ப்ரபாகர் என சொன்னார்! ஓ இவர்தானா என வழிந்துக்கொண்டேன் அவ்வ்வ்வ்...
பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பீச் பார்த்துட்டுதான் போகணும் என சாதிகா அக்கா சொல்லியிருந்தாங்க. பட் அக்கா வேறெங்கோ செல்லவேண்டியிருந்ததாலும், காலையிலேயே வந்துவிடுவேன் என என் உறவினர்கள் காத்துக்கொண்டிருந்ததாலும் உடனே செல்லவேண்டியதாகிவிட்டது! புத்தகவெளியீடு முடிந்ததும் கிளம்பிவிட்டோம்! ஆனாலும் போக மனமே இல்லை! ருக்மணி அம்மாவிடம் விடைபெற அவர்கள் கை பிடித்து பேசினாங்க... ஷாம் தலையை தடவி வாழ்த்து சொன்னாங்க!
சிவாவிடம் விடைபெற்ற போது வாசல் வரை வழியனுப்ப வந்தார். கூடவே
கறிவேப்பிலை சாதம் (சிவா கமென்ட் பார்க்க) பற்றிய பஞ்சாயத்து வைத்தார். நாட்டாமை கசாலி அண்ணா தான்! அண்ணாவை நைஸாக நான் மிரட்ட கறிவேப்பிலை, கருவேப்பிலை 2மே சரிதான் என தீர்ப்பு சொன்னார் :-)
மண்டபத்தின் கீழே வரை வழியனுப்ப சிவா, சிபி, சேக், கசாலி அண்ணா வந்திருந்தாங்க... அப்போது சிபி என்னை பார்த்து "என் பதிவுக்கெல்லாம் இனி வந்து ஓட்டு போடலன்னா உங்க பதிவுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு போடுவேன்"ன்னு மிரட்டினார்! என் ப்ளாக்ல கமென்ட் போடலன்னா நானும் மைனஸ் ஓட்டு போடுவேன்னு பதிலுக்கு டீல் பேசினேன் அவ்வ்வ்வ்வ்
இறுதிவரை வழியனுப்ப இவர்கள் வந்தது உண்மையிலேயே நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றுவந்தது போன்ற உணர்வை தந்தது! மொத்தத்தில்
இது சத்தியமா பதிவர் சந்திப்பே இல்லை! குடும்ப உறவினர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்! அங்கும் கூட கேட்டரிங் ஆட்கள், வரவேற்க வாசலில் பொம்மை என எல்லாமே அந்நியமாய் தெரியும்.. ஆனால் இந்த சந்திப்பிலோ வாசலில் வரவேற்க , ஜூஸ், டீ கொடுக்க, சாப்பாடு பரிமாற, சாப்பாட்டின் நடுநடுவே என்ன வேண்டுமென கேட்க, ஜாலியாய் பேச என எல்லா வேலைகளுக்கும் பதிவர்களே செயல்பட்டு
"நாமெல்லாம் ஒரே குடும்பத்தவர்கள்" என்ற உணர்வை ஏற்படுத்தியது!
விழாக்குழுவனருக்கு,
மனமார்ந்த பாராட்டுக்கள்! பல விஷயங்களில் சபாஷ் போட வைத்தீர்கள்... ஒவ்வொரு விஷயங்களிலும் உங்கள் திட்டமிடல் அடுத்தமுறையும் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது! சூப்பர் சகோஸ்! இந்த திருவிழாவில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்வான தருணங்களாக மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்!
டிஸ்கி : 2 பதிவா போட நெனச்சேன் :-) மக்கள் கத்துவாங்க என்பதால் ஒன்னா போட்டுட்டேன்! விடாம படிச்சுருங்க! அப்பப்ப கேள்விகேட்டு மடக்குவேன் :-))))