கங்கா. இவள் தான் இந்த கதையின் நாயகி. எல்லாருடனும் எளிதாய் பழகிவிடும் குணம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் ரசிக்கும் மனம். எப்போதும் இவளை சுற்றி பிரன்ட்ஸ் கூட்டம் இருந்துட்டே இருக்கும்.


இவர் தான் ஹீரோ. ராகுல்! கிட்ட தட்ட ஹீரோயின் போல் தான். இளமைகாலம் திரும்பாது என்னும் சொல்லே மந்திரமாய் எண்ணி ஜாலீயாய் திரிபவன். கிட்ட தட்ட தரடிக்கெட்டு! குட்டி சுவற்றில் நண்பர்கள் அனைவரும் உக்கார்ந்துக்கொண்டு  சிக்ரெட்டை ஊதிக்கொண்டே போகும்/வரும் பெண்களை கேலி செய்யும் முக்கிய அந்தஸ்த்தில் உள்ள வேலை.  இந்த வேலைக்கு தாராளமாய் பணம் பாக்கெட் மணியாய் அப்பாவிடமிருந்து பெறுவதால் இன்னும் அவனின் இளமைகாலம் பற்றி சொல்லவா வேண்டும்???



பெண்கள் ஈசியா இவன் வட்டத்துக்குள் நுழைந்துவிடுவதால் கங்கா அவன் கண்ணுக்கு வித்தியாசமாய் தெரிந்தாள்.

கங்கா செல்லும் எல்லா இடங்களுக்கும் சென்று எப்படியாவது பேசிடலாம்னு நெனைச்சான். இதெல்லாம் கங்காவுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் பொழுது போகணுமே :-)  6 மாதம் இப்படியே சென்றது

ஒரு முறை ராகுலின் செல்போன் அடித்தது. "நான் கங்கா பேசுறேன். உங்கிட்ட பேசணும். காலைல வரமுடியுமா?" ஆச்சர்யத்திலிருந்து மீள சில நிமிடங்கள் தேவைபட்டது. சகஜநிலைக்கு வரும் போது போன் மட்டும் அவன் கையில்.  இது கனவா இல்ல உண்மையிலேயே போன் போட்டாளா என  சிந்தித்து சிந்தித்து தலையை கழட்டி கீழே வைக்கும் அளவுக்கு பாரம். அவளே தான்......உறுதிபடுத்தியபின்  தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான். உண்மையில் அவள் வருவாளா???


கங்காவிற்கு முன்பே அந்த இடத்தில் ராகுல் ஆஜர். "ஆச்சர்யமா இருக்கு. உங்க கிட்ட இருந்து போன் வரும்னு நெனச்சு கூட பாக்கல. என் நம்பர் உங்களுக்கு...............?"

அதென்ன பெரிய விஷயம் என்பது போல் புன்னகைத்தாள்.

"சரி... எதுக்கு கூப்டீங்க ?" ஆவலாய் கேட்டான்.

"என்ன? என்ன(ஐ) லவ் பண்றீயா?"

முதல் வார்த்தையே காதலை பற்றியது தான் என்பதை அவன் சற்றும் எதிர்பாத்திருக்கவில்லை. அடுத்து மீண்டும் ஒரு அதிர்ச்சி தந்தாள். அவன் பதில் சொல்ல எத்தனித்த போது.....

"அப்படியொரு எண்ணத்துல தான் என் பின்னாடி ரொம்ப நாளா சுத்திட்டிருக்கன்னு தெரியும். தேவையில்லாம மனச போட்டு கொளப்பிக்காத"

"ஏய்... லுக்.... நீயா தான் போன் போட்டு கூப்ட.... மூச்சே விடாம படபடன்னு பேசுற? எனக்கும் பேச டைம் கொடு.  நா போற இடத்துக்கெல்லாம் நீ வந்தா அது என் தப்பா? நா ஒன்னும் உன்னைய லவ் பண்ணல. புரிஞ்சதா?" என பொரிந்துதள்ளிவிட்டான்.

"இத தான் நானும் எதிர்பார்த்தேன். ரொம்ப தேங்க்ஸ்! "

ம்???? சரி என்னைய ஏன் கேக்குற? நீ என்னைய லவ் பண்றீயா என்ன?-இது ராகுல்

ஹா....ஹா....ஹா.... ஹேய்..... ஜோக்கா? நா கற்பனைக்கும் உன் லைப் ஸ்டைலுக்கும் இடையேயான தூரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே அதிகம்.  என் பின்னாடி சுத்துற மாதிரி ஒரு பீலிங்க். அதான் உன்கிட்டையே கேட்டுட்டேன். சரி வரட்டா?"

அவளின் பேச்சுகளுக்கு விடை தெரியாதவனாய் மௌனத்தில், கோபத்தில், இயலாமையில் ராகுல்...



சந்தோஷமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் ஸ்கூட்டியில் பறந்தாள் தன் உயிர்தோழி ரம்யாவின் காதலில் தான் குறுக்கே இல்லை என்ற திருப்தியில்.........  இதுவரை போகும் இடமெல்லாம் ராகுல் தென்பட்டது தன்னை பார்க்க இல்லை எனவும், கூடவே இருக்கும் ரம்யாவிற்காக மட்டும் தான் என்பதையும் உறுதி படுத்தியவளாய் இந்த விஷயத்தை ரம்யாவிடம் சொல்லி அவளின் சந்தோஷத்தையும் வெட்கத்தையும் கண்டு உள்ளம் பூரித்தாள்.

கங்காவின் உள்ளம் கலங்கியது அவளின் நான்கு சுவறு படுக்கை அறைக்கும் ஈரம் தாங்கிய தலையணைக்கு மட்டுமே தெரியும். தன் காதலை தோழிக்கு விட்டு கொடுத்த வலி ஒருபுறம். ராகுல் தன்னை காதலிக்க வில்லை என்ற வேதனை ஒரு புறம் அவளை வாட்டி தீயிட்டு கொழுத்த தான் செய்தது.


வேலைக்காக ராகுலும் வெளிநாடு சென்றுவிட்டான். அவ்வப்போது ரம்யா ராகுலிடம் பேசிவதை கங்காவிடம் பகிர்ந்துக்கொள்வாள். ரம்யா செல்போனில்  பேசும் போது அவ்வபோது கங்காவிடம் பேச சொல்லி நீட்டுவாள்.  உள்ளத்தின் வேதனை விழியின் நீர் துளி காட்டி கொடுத்துவிடுமோ என்ற பயத்தில் நாசூக்காய் நழுவிவிடுவாள்.

3 வருடங்கள் கழிந்தது...

எதேச்சையாக பேருந்து நிறுத்தத்தில் அவளை கடந்து சென்ற காரில்  ராகுலை கண்டாள் கங்கா. ஒரே ஆச்சர்யம். நேற்று வரை ரம்யா ராகுலின் இந்திய வருகை பற்றி கூறவில்லை. ஒரு வேளை ரம்யாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க கூட இருக்கலாம். சிறுது தூரம் சென்ற கார் மீண்டும் திரும்பி அவளை நோக்கி வந்தது.

"ஹாய்... ராகுல்...! என்னை ஞாபகம் இருக்கா?"

ஹேய் கங்கா.... மறக்க கூடிய ஆளா நீ? எப்டி இருக்க?

ம்ம்ம்ம்ம்ம்......பார்த்தா தெரியல? ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.

"எவ்வளவு நேரம் தான் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணுவ? இப்பவே லேட் ஆச்சு. நம்பிக்கை இருந்தா கார்ல ஏறலாம் :-) . ஒன்னை ஒன்னும் கடத்திடமாட்டேன்." சிரித்தபடியே கங்கா காரில் ஏறினாள். சிறிது நேரம் காருடன் சேர்த்து அவர்களின் மௌனமும் பயணித்தது. கங்காவே ஆரம்பித்தாள்.

ஆமா நீ எப்டி இருக்க? பாரின் லைப் எப்படி இருக்கு??

 "இன்னும் உன்னையே நெனச்சுட்டு........... ஏதோ இருக்கேன். அங்கே போயும் உன்னை மறக்க முடியாமதான் தவச்சுட்டிருக்கேன்."

"......................................"

"நீ என்னைய வேணாம்னு சொன்னாலும் கூட  இந்த நொடி வரைக்கும் உன்னைய.... உன்னைய மட்டும் தான் காதலிச்சுட்டிருக்கேன்."

"ர....ர்........ரம்யா??"

"அவ அப்பப்ப உன்னைய பத்தி சொல்ற விஷயங்கள் மட்டுமே எனக்கு திருப்தி கொடுத்துட்டிருந்துச்சு. அவளும் எவ்வளவோ ட்ரை பண்ணா... உன்னையும் என்னையும் சேர்த்து வைக்கிறதுக்கு.  பட் கல்நெஞ்ச காரியாச்சே நீ?" அவளிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாததால் அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.



தான் இறங்கும் இடம் வந்த பின் காரைவிட்டு இறங்கி அவனிடம் எதுவும் சொல்லாமலேயே வீட்டுக்குள் சென்றுவிட்டாள். "ச்ச.... நிச்சயதார்த்தம் ஆன பொண்ணுகிட்ட இப்படி பேசுனது எவ்வளவு அநாகரிகமான விஷயம்??"என தன்னை தானே நொந்துக்கொண்டான்.

ஒரு வாரத்திற்கு பிறகு.....

ராகுலின் செல்போன் மணி ஒலித்தது.  "நான் கங்கா பேசுறேன். உங்கிட்ட பேசணும். வரமுடியுமா?"

அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு முன்பே அவள் அங்கே காத்துக்கொண்டிருந்தாள்.

அன்னைக்கு ஒருவார்த்தை கூட பேசாம போயிட்ட? எதுவும் தப்பா பேசிட்டேனா..  சரி இப்ப என்ன விஷயமா வர சொன்ன?

இனி உன்னை யாருக்காகவும் விட்டுகொடுக்க போவதில்ல. ஒரு நொடி கூட உன்னைய இனி பிரியமாட்டேன்" என அவன் மார்பில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள்.

அவளின் திடீர் மாற்றத்திற்கு காரணம் ஆராய்வதற்கு இடம் கொடுக்காமல் சந்தோஷம் அவன் உச்சி முதல் பாதம் வரை பரவியிருந்தது. அவளை பார்க்க இந்தியா வந்தவன் அவளே சொந்தமாக போகிறாள் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.


**********சுபம் :-)**********
எப்ப்ப்ப்ப்ப்ப்பா எந்த தொடர்பதிவுக்கும் ஒரு மாசம் வரைக்கும் மெனக்கெட்டதே இல்ல..... அதிரா மேல கொஞ்சம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-) 

என்னையும் நம்பி என்னை தொடர்பதிவுக்கு அழைத்த சமைத்து அசத்தலாம் ஐலேசா.....சாரி சாரி...... ஆசியா ஹி...ஹி...ஹி..... க்கு மிக்க நன்றி. கதையும் அதற்கேத்த பாட்டும் அமைக்க சொல்லியிருந்தாங்க (ஐ.... செலவு பண்ணாமலேயே டைரக்டர் ஆயிட்டோம்ல)  இனிமே நோகாம  நொங்கு திங்கிற தொடர்பதிவுக்கு கூப்டுங்கப்பா.... கதை எழுதி பாட்டு எழுதணுமா இல்ல பாட்ட செலக்ட் பண்ணி கதை எழுதணூமான்னு ஒன்ன்ன்ன்னும் புடிபடல. பாட்டுக்காகவே கதைய மாத்தியாச்சு :-)

யான் பெற்ற துன்பம் பெறுக இந்த பதிவுலகம்.... இதனை தொடர என் தம்பிகள் மற்றும் தோழிகள்
சிறகுகள் மது
நண்பர்கள் ராஜ்
தோழி கூடல் நிலா- நாகாராம்
உப்பு மடசந்தி-ஹேமா
காகித பூக்கள்- ஏஞ்சலின்
சாதாரணமானவள் 

யாராச்சும் எழுதாம எஸ்கேப் ஆனீங்கன்னு கேள்விபட்டேன்ன்ன்...... அவ்வளவு தான் சொல்லுபுட்டேன் ஹி..ஹி...ஹி...

, , ,

“மாத்தியோசி” என்ற தலைப்பின் கீழ் பதிவர்கள் தங்களுக்குள் மாற்றிப் பதிவெழுதலாமே! என்ற கருத்தை  சகோ.வரோ  முன் வைத்த போது    சகோதர்கள் துஸ்யந்தன், மதுரன், கே.எஸ்.எஸ்.ராஜ், மற்றும் ஆமினாவாகிய நான் :-)  அதற்கு விருப்பம் தெரிவித்திருந்தோம். அதன்படி சிறகுகள் ப்ளாக் ஓனர் சகோதரர் மதுரன் அவர்களின் சிறுகதை இன்று  என் குட்டிசுவர்க்கத்தை அலங்கரிக்கிறது.

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்
_________________________________________________________
நேரம் 12.30 ஐ தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில மணிநேரங்களில் எப்படியும் விடிந்துவிடும். நேரம் என்ன எனக்காக நிற்கவா போகிறது?..................... கலைவாணியின் மனம் ஓரிடத்தில் நின்றபாடில்லை.  என்ன செய்வது? எதிர்த்து நிற்பதும் முடியாத காரியம். எதிர்த்தால் அம்மா அடிப்பா… ஊரார் குசுகுசுப்பார்கள். வெளியில் தலைகாட்ட முடியாது. அம்மா நினைத்து நினைத்து திட்டிக்கொண்டே இருப்பா..
”பேசாமல் இருந்துவிடுவோமா? ஊரில் எனக்கு மட்டுமா நடக்கிறது! எல்லாருக்கும்தானே நடக்குது” மனம் பலவாறாக சிந்தித்தது.


நாளை விடிந்ததும் கலைவாணியின் பூப்புனித நீராட்டுவிழா. வீட்டு முற்றத்தில் ஊரே கூடி பந்தல் போட்டு அலங்காரம் செய்துகொண்டிருக்கிறது. தாயும் தந்தையும் பூரிப்பில் அங்குமிங்குமாக நடந்து வேலைகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை “எங்கள் மகளும் வயதுக்கு வந்துவிட்டாள். நாளை அவளுக்கு சேலை உடுத்தி, நகைகள் அணிவித்து ஊரார் முன் கொண்டாடப்போகின்றோமே” என்ற பூரிப்பு. ஊராருக்கோ நாளை ஒரு கொண்டாட்டம்.
ஆனால் கலைவாணிக்கோ அது ஒரு உரிமை பிரச்சினை. அம்மாவும் அப்பாவும் நாளை சந்தோசமாக கொண்டாடப்போகிறார்களே என்பதை விட, இந்த ஆணாதிக்க சமூகத்தின் முன் நாளை என்னை காட்சிப்பொருளாக்கப்போகிறார்களே என்ற எண்ணம்தான் உறுத்திக்கொண்டிருந்தது.
கூடவே இவர்களை எதிர்த்து என்னால் என்ன செய்யமுடியும் என்ற கேள்வியும் குழப்ப மெதுவாக கட்டிலில் சாய்ந்தாள். எவ்வளவோ முயன்றும் தூக்கம் வர மறுத்தது. இரவு கொடுத்த பத்தியச்சாப்பாடு மேசையில் அப்படியே கிடந்தது.
ஜன்னல் வழியே அறைக்குள் படர்ந்திருந்த நிலவொளி கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர்ந்துசெல்ல சில மணிநேரங்கள் அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் நீண்டதொரு பெருமூச்சை விட்டபடியே எழுந்து கதிரையில் உட்கார்ந்தாள்.
”நான் வயதுக்கு வந்ததை மேடை போட்டு, மந்திரம் ஓதி உலகுக்கு அறிவிக்க இவர்கள் யார்?” ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டதை உலகுக்கு அறிவிப்பதில் அவள் பெற்றோருக்காகட்டும், சொந்தங்களுக்காகட்டும் அப்படி என்ன சந்தோசம்?.......
எங்கள் வீட்டில் ஒரு ஆடு தயாராகிவிட்டது. நரிகளே ஓடிவாருங்கள் தசைகளை உண்பதற்கு தயாராகுங்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்களா?
ஒரு ஆண் வயதுக்கு வந்தால் அது பற்றி அலட்டாத சமூகம் பெண்கள் வயதுக்கு வருவதை மட்டும் ஊரறிய கொண்டாடுகிறதே?
தன்னை ருசிக்க காத்திருக்கும் ஓர் ஆணாதிக்க சமூகத்தின் வெறிக்கொண்டாட்டமாகவே அந்த பூப்புனித நீராட்டுவிழாவை அவளால் பார்க்கமுடிந்தது.

”நாளை நடக்கும் அவர்களின் விழாவில் என் சுதந்திரங்கள்கூட பலிகொடுக்கப்பட்டுவிடுமே!! விரும்பிய ஆடை அணியமுடியாது, விரும்பிய இடம் செல்லமுடியாது, எல்லோருடனும் பேசமுடியாது, ஆண்களுடன் கண்டபடி கதைக்கக்கூடாது, பொது இடத்தில் முன்னுக்கு நிக்கக்கூடாது….. இப்படி எத்தனையோ…”
“மொத்தத்தில் நாளையிலிருந்து வேள்விக்காக பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆடுபோல நானும் ஆகிவிடுவேனே”
இதுவரை அடக்கிவைத்திருந்த அவளது கோபங்கள் கண்களிண் வழியாக உடைந்து கண்ணீராக வெளியேறின.
“என்ன நடந்தாலும் சரி! இவர்களின் தாளத்துக்கு நான் ஒருபோதும் ஆடப்போவதில்லை” நெஞ்சை சுட்ட கோபத்தினால் எழுந்த உறுதி மனதில் ஒருவித வெறுமையுடன் கூடிய அமைதியை தந்தது அவளுக்கு. அந்த அமைதியுடனேயே இலேசாக கண்ணயர்ந்து போனாள் கலைவாணி.

“ அம்மா கலை…. எழும்பும்மா... எழும்பி கெதியா குளி..” அம்மாவின் குரல் தூக்கத்தை கலைக்க மெதுவாக எழுந்து கட்டிலிலேயே சாய்ந்துகொண்டாள். ”இரவு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. யார் என்ன சொன்னாலும் சரி” தனக்குள் தானே கறுவிக்கொண்டாள். 


“என்னடி பிள்ளை இன்னும் குள்ளிக்கேல்லயே….. கெதியா எழும்பு.. போய் குளி” படபடத்தவாறே வந்த அம்மாவை ஒருகணம் வெறித்துப் பார்த்த கலைவாணி “அம்மா எனக்கு விருப்பம் இல்லை. நான் வெளிக்கிட மாட்டன்” என்றாள்.
அம்மா ஸ்தம்பித்துப்போய் திரும்பினாள். ”என்ன பிள்ளை சொல்லுற? ஏன் உன்ர வயதுப் பிள்ளையள் இப்பிடியே சொல்லுதுகள்? உன்ர அப்பன் என்னத்துக்கு கஷ்ரப்பட்டு உழைக்கிறார். உன்ன நல்ல இடத்தில கட்டிக்குடுக்கத்தானே. இப்படி கொண்டாடாட்டி சனம் நாலுவிதமா கதைக்குங்கள். உனக்கு ”ஒண்டும்” ஆகேல்ல எண்டு கதைச்சா உன்ர வாழ்க்கையே நாசமா போயிரும்”
“இல்லையம்மா அது வந்து….”
“ஒண்டும் கதைக்காத.. நீ சின்னப்பிள்ளை. உனக்கு இப்ப ஒண்டும் தெரியாது! சனம் ஒவ்வொரு விதமா கதைச்சா உன்ன எவன் கட்ட வருவான்? பிறகு நானும் கொப்பரும் மருந்த குடிச்சு சாகவேண்டியதுதான்…. நாங்க என்னத்துக்கு இவ்வளவு கஷ்டப்படுறம்…..”
அம்மா விசும்பத்தொடங்கிவிட்டாள். ”இஞ்ச பார்… நாளைக்கு நாங்க உயிரோட இருக்கோனும் எண்டா பேசாம வெளிக்கிடு…. இல்லாட்டி உன்ர எண்ணத்துக்கு நட……..” என்று கூறிவிட்டு விசுக்கென்று வெளியே போய்விட்டாள் அம்மா.

”அவளுக்கென்ன தெரியும்.. பழமையிலேயே கட்டுண்டவள். ஆண்கள் எம்மை அடக்கிவைத்திருக்க போட்ட எழுத்தில்இல்லாத சட்டத்தையெல்லாம் பண்பாடாக கருதி ஏற்றுக்கொண்டிருக்கிறாள். அவளை பொறுத்தவரை இந்த பூப்புனித நீராட்டுவிழா ஒரு சம்பிரதாயம். நாளை என்னை காட்சிபொருளாக்கி ரசித்துக்கொண்டிருப்பவர்களின் முன்னால் நான் கூனிக்குறுகி உட்கார்ந்திருக்கப்போவது அவளை பொறுத்தவரை ’அடக்கமான பெண்’ அவளுக்கு இப்போது சொன்னாலும் புரியப்போவதில்லை.
”என்ன செய்வது? அப்பாவும் அம்மாவும் என்னை கஷ்ரப்பட்டு வளர்த்தவர்கள். அதற்காக என் உரிமைகளை விட்டுக்கொடுக்கலாமா?”
”ஒருவேளை நான் மறுத்துவிட்டால் அம்மா சொன்னதுபோல தற்கொலை செய்துகொண்டால்???”
அம்மா அழுத்தக்காரி. சொன்னதை செய்துவிடுவாள்.
நீண்டநேர சிந்தனைக்கு பின் கட்டிலை விட்டு எழுந்தாள்.
“என் உரிமைகளைவிட அம்மா அப்பாதான் முக்கியம்… ஆனால் ஒன்று…. என் பிள்ளைக்கும் இதே நிலை வர நான் அனுமதிக்கப்போவதில்லை…”


by
மதுரன் ரவீந்த்ரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரும்பதங்கள்
கொப்பர் :- அப்பா
கெதியா :- விரைவாக, சீக்கிரமாக
_____________________________________

மாத்தியோசித்தவர்கள் :-)

மதுரனின் பதிவு குட்டிசுவர்க்கத்தில்-  நிலவுகள் விற்பனைக்காக

சகோ வரோவின்  ப்ளாக்கில்-  என் பதிவு பழமையிலேயே புதுமை கண்ட இஸ்லாம் பாகம்-2

துஷ்யந்தனின் ப்ளாக்கில் வரோ வின் பதிவு  ஊரில ஹீரோ! வெளிநாட்டில ஸீரோ!

மதுரனின் ப்ளாக்கில் ராஜ்'ன் பதிவு   குஸ்பு என்றும் இளமையான பூ

ராஜ்'ன் ப்ளாக்கில் துஷ்யந்தனின் பதிவு  நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். அதை ஏன்  விமர்சிக்க வேண்டும்?

, , ,